மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கெவிலியாமடு கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன் கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மங்களராமய தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கெவிலியாமடு கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனை தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் நுழைந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு குறித்த காணிகளை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அங்குவந்த கெவிலியாமடு கிராம உத்தியோகத்தரை மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்.
அத்துடன் கிராம சேவகர் உட்பட தமிழர்கள் அனைவரையும் புலிகள் என அடையாளப்படுத்தி மட்டு – அம்பாறை துணை சங்கநாயக்கரான சுமனரத்ன தேரர், கொலை அச்சுறுத்தலும் விடுத்தார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கெவிலியாமடு கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதன்போது கடமையை செய்வதற்கு சென்ற தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் கிராம சேவகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸார் அம்பிட்டிய சுமனரத்ன தேரரரின் செயற்பாடுகளைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தொடர்பிலும், தனது முறைப்பாட்டில் கெவிலியாமடு கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
0 Comments