வவுனியா நகரசபைக்குச் சொந்தமான இலங்கை பேரூந்து தரிப்பிட கடைத்தொகுதியில் உள்ள கூரையின் உட்பகுதி உடைந்து விழுந்தமையால் அப்பகுதி வர்த்தக நிலையங்களுக்கு வந்த மக்களும், வர்த்தகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
நேற்று பிற்பகல் (31.10) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரசபைக்கு சொந்தமான இ.போ.சபை பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள கடைத்தொகுதியின் மேல்மாடி கூரையின் உட்பகுதி மழை காரணமாக நீர் ஒழுகி ஊறி உடைந்து விழுந்துள்ளது. இதனால் அப் பகுதியில் இருந்த மின்சார இணைப்புக்கள் கூட செயலிழந்து அதன் இணைப்பு வயர்கள் அறுவடைந்துள்ளன. வர்த்தக நிலையங்களின் களஞ்சியசாலைகள், அலுமினிய பிற்றிங் கடை காணப்படும் நகரசபைக் கடைத்தொகுதியின் மேல்மாடிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் நின்றவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்திய போதும் உடனடியாக வந்து அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி வர்த்தகர் தெரிவித்துள்ளதுடன், உடைவடைந்த பகுதியைத் தொடர்ந்து காணப்படும் கூரையின் உட்பகுதியாலும் மழை நீர் கடைப்பகுதிக்குள் வருவதால் அப் பகுதியும் உடைவடைக் கூடிய நிலையிலேயே இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments