Home » » கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உடனடி வகுப்பு தடை! விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு!!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உடனடி வகுப்பு தடை! விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் நேற்று (26) சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி இடை நிறுத்தப்படுவதாகவும், முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
மருத்துவ பீட மாணவர்களின் பகிடி வதை சார் நடவடிக்கைகள் காரணமாக பேரவையின் முடிவுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் நேற்றைய தினம் இரவு தெரிவித்தார்.
மருத்துவ பீடத்தின் முதலாம் வருடத்துக்கென கடந்த 15ம் திகதி புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் முதலாம் வருட மாணவர்கள் மீதான பகிடி வதை நடவடிக்கைகள் குறித்து பல தடவைகள் சீர் செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதற்கு மாணவர்கள் ஒத்துழைக்காமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனளிக்காத நிலையில் இந்த முடிவினை பேரவையின் தீர்மானங்களுக்கமைய எடுத்ததாகவும், 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்கள் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு முன்னர் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை மட்டக்களப்பு- பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தின் விடுதிக்குச் சென்று பேரவையின் முடிவுகளை அறிவிக்க முயன்ற வேளையிலும் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பதிவாளர் வி.காண்டீபன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பு, மற்றும் மாணவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு சகல மாணவர்களும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணை போதல் நிருவாகத்தின் நடவடிக்கைகளுக்கு சரியான முறையில் ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஏனைய பல்கலைக்கழகங்களில் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படாத நிலை இருக்கின்ற போதும மாணவர்களின் கல்வி நன்மைகள் கருதி விடுதி வசதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.
இவற்றினையும் கருத்தில் கொள்ளாது மாணவர்கள் செயற்படுகின்றமையானது கவலையளிப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |