Advertisement

Responsive Advertisement

பாரிய சத்திரசிகிச்சைகள் தரவரிசையில் கல்முனை ஆதாரவைத்தியசாலை சாதனை

இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் இவ்வாண்டின் முதல்காலாண்டில் நடாத்தப்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகளின் தரவரிசையின்படி கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட பிரசுரத்தில் இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்தவாரம் கொழும்பில் நடாத்தப்பட்ட வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கான மாதாந்த அமர்வில் இது விநியோகிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள பெரிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பாரிய சத்திரசிகிச்சைகளை மட்டும் மையமாக வைத்து சுகாதார அமைச்சு நடாத்திய இவ்வாய்வில் 10வீதத்திற்கு மேல் வீதத்தை பெற்ற 42 வைத்தியசாலைகள் இடம்பிடித்துள்ளன.
57.38 வீதத்தைப் பெற்று முதலிடத்தை பேராதனை போதனா வைத்தியசாலை சுவீகரித்துள்ளது.
54.79 வீதத்தைப் பெற்று கல்முனை ஆதாரவைத்தியசாலை இரண்டாமிடத்தைச் சுவீகரித்துள்ளது.
அதேவேளை 53.57வீதத்துடன் மூன்றாமிடத்தை வெலிசற தேசிய வைத்தியசாலை பெற்றுள்ளது.
இத்தரவரிசைப்படுத்தலில் தேசிய வைத்தியசாலை 5ஆம் இடத்தையும், கண்டி போதனா வைத்தியசாலை 6ஆவது இடத்தையும் காலி கராப்பிட்டிய போதனாவைத்தியசாலை 26வது இடத்தையும் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை 38வது இடத்தையும் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தேசியரீதியில் இரண்டாமிடம் பெற்ற கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலாமிடத்திலுள்ளது.
advertisement
அதேவேளை மூதூர் ஆதாரவைத்தியசாலை 10வது இடத்திலும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை 17வது இடத்திலும் மகாஒய ஆதாரவைத்தியசாலை 19வது இடத்திலும் கந்தளாய் ஆதாரவைத்தியசாலை 29வது இடத்திலும் தெஹித்தயகண்டிய ஆதார வைத்தியசாலை 34ஆவது இடத்திலும் இடம்பிடித்துள்ளன.
வட மாகாணத்தைப்பொறுத்தவரை தேசியரீதியில் 9வது இடத்திலுள்ள வவுனியா ஆதார வைத்தியசாலை முதலிடத்தில் உள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை 15வது இடத்திலும் மன்னார் ஆதார வைத்தியசாலை 22வது இடத்திலும் யாழ்.போதனாவைத்தியசாலை 38வது இடத்திலும் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை 41வது இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments