Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மில்லியன் லீற்றர்களில் வடக்கை ஆக்கிரமிக்கும் மது!

தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம். உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம் இடத்திலுள்ளது. 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மதுபாவனை வடக்கில் அதிகரித்து விட்டதாக பேசப்படுகிறது. அதனை மறுத்து விடவும் முடியாது. ஆனால் அப்போது குறைவாக இருந்த மதுபாவனை போர் முடிவுற்ற பின்னர் அதிகரித்தமைக்குரிய காரணங்கள் ஆராயப்பட வேண்டியவையே. இந்த நாட்டின் ஜனாதிபதி 25 மாவட்டங்களிலும் யாழ் மாவட்டமே மது பாவனையில் முதலிடம் பெற்றிருப்பதாகவும், அதன் மூலம் திறைசேரிக்கு அதிக வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். உரிமைக்காக போராடிய ஒரு பிரதேசத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக திறைசேரிக்கு மதுபாவனை மூலம் பாரிய நிதி வழங்கப்படுகிறது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதைப் பாவிப்பவர்கள் யார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. வடக்கின் இளைஞர்கள் குடிகாரர்களா…? வடக்கில் உள்ள சனத்தொகையை விட மது பாவனை அதிகரித்து இருப்பதற்கு வடக்கு இனைஞர்கள் தான் காரணமா என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் வடக்கு, கிழக்கு பகுதியை மையப்படுத்தி நடந்த போதும் அது வடக்கிலேலேயே குவிவுமையமாகவும் இருந்தது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நிர்வாக ரீதியாக இறுக்கமான நடைமுறைகள் காணப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருப்பவர்கள் மது பாவிக்கக் கூடாது என்ற இறுக்கமான நடைமுறை அப்போது இருந்தது. அதனை அண்மையில் இராணுவத் தளபதி கமல் குணரட்ண எழுதிய நூல் ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளார். அதில் ‘ விடுதலைப்புலிகளின் நிகழ்வுகள், விருந்துபசாரங்கள் தொடர்பில் பெருந்தொகையான புகைப்படங்களை மீட்டிருக்கின்றோம். அவற்றில் ஒன்றில் கூட ஒரு மதுப்போத்தலை காணமுடியவில்லை. மது பாவனை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் எந்த தடயமும் இல்லை’ என புகழ்ந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மதுபானசாலைகளும் விரல் விட்டு எண்ணக் கூடியதாகவே இருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என்பவற்றின் அதிக பகுதிகள் நீண்டகாலமாக காலமாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் குறிப்பிடும் படியாக மதுபாவனை இருந்திருக்கவில்லை. தவறணைகள் மூலம் வடபகுதியில் உள்ளுர் கள்ளு விற்பனை இடம்பெற்றிருந்தது. அது வயது வந்த பெரியவர்களால் பாவனைக்குட்படுத்தப்பட்டது. ஆனாலும் வடக்கின் எந்தவொரு மாவட்டமும் மது பாவனையால் அதிகரித்த வருமானத்தரும் மாவட்டமாகவோ, அதிக மது விற்பனை உள்ள மாவட்டமாகவோ பதிவாகியிருக்கவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வரையறுக்கப்படட அளவிலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மது போத்தல்கள் வந்திருந்தன. ஆனால் தற்போதைய நிலைமை என்பது தலைகீழாக மாறிவிட்டது.
இலங்கையின் வருமானத்தில் 125 முதல் 150 பில்லியன் வரையான நிதி மதுபான வரியினால் கிடைப்பதாகவும் அந்த வருமானம் இல்லாவிட்டால் வரவு – செலவுத் திட்டத்தை வரைய முடியாது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகரித்த மதுபாவனை காணப்பட்டிருக்கின்றது என்றும் கடந்த மாதம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கூறியுள்ளார்.கடந்த 2009ஆம் ஆண்டு 7 லட்சத்து 62 ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான அளவு பியர் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டில் 40 கோடியே 57 லட்சம் லீற்றர் பியர் விற்பனையாகியிருக்கினறது. அதேபோல் 2009ஆம் ஆண்டு 65 லட்சத்து 98 ஆயிரம் லீற்றர் வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது 2013ஆம் ஆண்டில் 6 கோடியே 11 லட்சத்து 32 ஆயிரம் லீற்றராக அதிகரித்திருக்கின்றது. 2009 ஆம் ஆண்டில் 305 கோடியே, 19 லட்சத்து 60 ஆயிரம் லீற்றராக இருந்த கள்ளின் விற்பனை 2013ஆம் ஆண்டில் 566 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம் லீற்றராக அதிகரித்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சாராசரியாக 15 ஆயிரம் லீற்றர் மதுபானம் விற்பனையாகின்றது. 2002 ஆம் ஆண்டு 1 மில்லியன் லீற்றர் மதுபானம் விற்கப்பட்ட இங்கு 2013 ஆம் ஆண்டு 2 மில்லியன் லீற்றர் மதுபானமும் 2015 ஆம் ஆண்டில் ஆறு மாதங்களில் 4.5 மில்லியன் லீற்றர் மதுபானமும் விற்பனையாகியிருக்கின்றது. தற்போது இந்த அளவு மேலும் அதிகரித்து உள்ளதாகவே புள்ளி விபரத் தகவல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தையடுத்து வடக்கில் அதிகமாக மது விற்பனையாகும் பகுதியாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. இங்கு ஒரு இலட்சத்து 71 ஆயிரம் மக்கள் உள்ள நிலையில் இந்த வருடம் முதல் 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தொட்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து லீற்றர் மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பியர் வகைகள் ஆறு இலட்சத்து அறுபத்தேழாயிரத்து முப்பத்து நான்கு லீற்றரும், உள்நாட்டு சாராய வகைகள் ஆறு இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து நூற்று இருபத்தைந்து லீற்றரும், பிஸ்கி வகைகள் மூவாயிரத்து எழுநூற்று அறுபத்தொரு லீற்றரும், பிறண்டி வகைகள் ஒன்பதாயிரத்து அறுநூற்று எண்பதுதொன்பது லீற்றரும், ஜின் வகைகள் மூவாயிரத்து நாற்பத்து இரண்டு லீற்றரும், ரம் வகைகள் ஆயிரத்தி நூற்றி நாற்பத்தி மூன்று லீற்றரும், வொட்கா வகைகள் எண்ணூற்று இருபத்தேழு லீற்றரும், வைன் வகைகள் எண்ணூற்று எண்பத்து நான்கு லீற்றரும் விற்பனையாகியுள்ளன. இது தவிர தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்படுகின்ற போத்தல் கள்ளு மூன்று இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து தொளாயிரத்து இருபத்தாறு லீற்றரும், உடன் கள்ளு நான்கு இலட்சத்து எண்பத்தோராயிரத்து ஐந்நூற்று எண்பத்தொரு லீற்றரும் விற்பனையாகி இருக்கின்றது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களில் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்கள் முன்னிலை பெறுவதற்கு அந்த இரு மாவட்டங்களும் அதிக பயணிகள் வந்து செல்லும் இடமாக காணப்படுவதும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது. இரு மாவட்டங்களிலும் உள்ளவர்கள் தான் இதனை குடிக்கின்றார்களா என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் அதிக சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர்கள் வந்து செல்கின்ற பகுதியாகவும், வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து வேலை செய்கின்ற மற்றும் தங்கி நிற்கின்ற பகுதியாகவும் இருக்கின்றது. அவர்கள் பயன்படுத்தும் மதுபானம் கூட இதில் அடங்குகின்றது. அதுபோல் வவுனியா மாவட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இருந்து வருவோர், ஏனைய மாவட்டங்களுக்கு செல்வோர் என வடக்கிற்கும், தெற்குகுமான போக்குவரத்து மையமாகவும் வன்னியின் பொருளாதார கேந்திர பகுதியாகவும் உள்ளது. இதனால் இங்கும் அதிக சன நடமாட்டம் உள்ளது. அவர்களது பாவனை கூட இதில் உள்ளடங்கியுள்ளது. வடக்கில் பெருளவான இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் கணிசமான அளவு மதுபாவனையில் ஈடுபடுகின்றார்கள் என்பதை மறுத்து விட முடியாது. குறிப்பாக வடபகுதியில் இருந்து விடுமுறையில் வருகின்ற இராணுவத்தினர் வவுனியா அரச வாடி வீட்டு பகுதியில் மது அருந்தி விட்டே தென்பகுதிக்கான பேரூந்துகளில் ஏறி தமது வீடுகளை நோக்கி புறப்படுகின்றார்கள். ஆக வடபகுதி இளைஞர்கள் மட்டும் இந்த மதுபாவனை அதிகரிப்புக்கு காரணம் என கூறிவிட முடியாது. வடபகுதிக்கு கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகமாக வருகின்ற போதும் அதன் பாவனை என்பது வடக்கில் மிகக் குறைவே. வடக்கில் இருந்து தென்பகுதிக்கே அவை கடத்தப்படுகின்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
வடக்கின் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஓப்பீட்டளவில் மதுபாவனை குறைவாகவே உள்ளது. போரினால் ஏற்பட்ட வறுமை அதிக விலை கொடுத்து மது அருந்துவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துள்ள அதேவேளை, மதுபானசாலைகளும் அங்கு குறைவாகவே இருக்கின்றன. இப் பகுதிகளில் கள்ளு விற்பனை மதுபானத்தை விட அதிகமாகவே இருக்கிறது. இங்கு தொழில் நடவடிக்கைகளுக்காக வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்வோரே அதிகமாக மதுபானசாலைகளுக்குள் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இறுக்கமாக இருந்த சமூக கட்டமைப்பு போருக்கு பின்னர் ஏற்பட்ட அபரிதமான மாற்றம், பணப்புழக்கம், வேலையில்லா பிரச்சனை, சினிமா மோகம் என்பனவும் முன்னர் இருந்ததை விட இளைஞர்கள் மத்தியில் மது பாவனை அதிகரிப்பு ஏற்பட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துகின்ற மற்றும் முடிக்கின்ற மாணவர்களுக்கான அடுத்த நகர்வு தொடர்பான சிறந்த கல்விக் கொள்கை இல்லாத தன்மையே உள்ளது. கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள், உயர்தரத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாத மாணவர்கள் என பலரும் அடுத்த கட்டம் என்ன செய்வது என்பது தொடர்பில் தெளிவற்ற தன்மையிலேயே உள்ளனர். அவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்கள் எதுவுமில்லை. இது தவிர பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள் பரீட்சை பெறுபேறு வந்து ஒரு வருடம் வரை அந்த அனுதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர்களும் தமது பெறுபேற்றுக்காக மூன்று மாதங்களாவது காத்திருக்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையில் உள்வர்களும் இவ்வாறான மது போதைப் பாவனைக்கு உட்படுவதை அவதானிக்க முடிகிறது. படிப்பில் இருந்த கவனம் பின்னர் ஏற்பட்ட இடைவெளி காரணமாக வேறு திசை நோக்கி சிதறல் அடைகின்றது. வேலையில்லா பிரச்சனை, கல்வி முறை, குடும்பங்கள் வேலைகளின் நிமித்தம் பிரிந்து வாழுதல், போரின் காரணமாக ஏற்பட்ட மனவடுக்கள், காதல் தோல்விகள் என்பன குறிப்பிட்டளவானோரை மதுபாவனைக்கு தூண்டியுள்ளது. இவை தொடர்பில் கவனம் செலுத்தி பொருத்தமான திட்டங்கள், ஆற்றுப்படுத்துகைகளை செய்யாது மது பாவனை அதிகரிக்கிறது எனக் கூறுவதால் எதையும் அடைந்து விட முடியாது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் அதிகளவிலான மதுபானசாலைகள் முளைந்திருக்கின்றன. பாடசாலைகள், ஆலயங்கள் என்பவற்றில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்கு அப்பால் தான் மதுபானசாலைகளை அமைக்க முடியும். ஆனால் வடக்கில் அந்த நடைமுறை கூட சில இடங்களில் பின்பற்றப்படவில்லை. யாழ் நகரப்பகுதியில் மாத்திரம் 70 மதுபான சாலைகள் அனுமதி பெற்று இயங்குகின்றன. மதுபானசாலைகள் அதிகளவில் திறப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம் வடக்கில் பல பாடசாலைகள் மூடப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்த வில்லை. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் மதுபான சாலைகள் அதிகரித்த அதேவேளை வட மாகாணத்தில் யுத்தத்திற்கு முன்பு 1091 பாடசாலைகள் இயங்கியபோதும் இன்று வட மாகாணத்தின் 12 கல்வி வலயத்திலும் மொத்தமாக 998 பாடசாலைகளே இயங்குவதாக வட மாகாண கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே, மதுபாவனை போருக்கு பின்னர் வடக்கில் அதிகரித்து இருக்கின்றது. இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளும் காரணம். கல்வி தொடர்பிலும் கல்வி கற்று இடைவிலகும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பிலும் நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்களை தொழில்நுட்ப கல்லூரிகளில் உள்ளீர்பதற்கான நடவடிக்கைகள் சீராக ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான திட்டமிடல்களை மேற்கொள்ளாது மதுபானசாலைகளை திறந்து விட்டும் அதற்கு அதிக அனுமதிகளை வழங்கிவிட்டும் இளைஞர்கள் குடிகாரார் ஆகிறார்கள் என கூறுவது எந்த பயனையும் தரப்போவதில்லை. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புக்களையும், தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி அவர்களை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்காளர்களாக மாற்றுவதற்குரிய கொள்கை வகுப்புக்களில் ஈடுபடுவதன் மூலமே இத்தகைய அதிகரிப்பை வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் குறைத்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments