Home » » மட்டக்களப்பில் பொலிஸ்மா அதிபர் - பொலிஸ் சேவையின் 150 வருட பூர்த்தி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் பொலிஸ்மா அதிபர் - பொலிஸ் சேவையின் 150 வருட பூர்த்தி கொண்டாட்டம்

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்கேற்றார்.
குறித்த நிகழ்வு இன்று(01) காலை நடந்துள்ளதாகவும், மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கு கொண்டார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், நாட்டில் தேசியவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என்பன இல்லை. மக்களும் இதைத்தான் விரும்பினார்கள். நாட்டில் இன்று கடுமையான சட்ட ஒழுங்குகள் காணப்படுகின்றன. பொலிஸ் திணைக்களம் சவால்களை வெளிப்படையான முறையில் எதிர்நோக்கி வருகின்றது. உங்களை பாதுகாப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் எமது கடமையாகும். பொலிஸாரின் வெற்றிக்காக சிவில் பாதுகாப்புக் குழுவில் சில மாற்றங்களை ஏற்படுத்தவும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்களில் எமது திட்டத்தினை அறிமுகப்படுத்த தீர்மானித்திருக்கின்றேன். 
சமய அனுஷ்டானங்கள், கலாசாரம், சுகாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களின் உதவியுடன் ஏற்கனவே மக்களுக்கு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு அவை தொடர்பான விளக்கங்களும் விழிப்பூட்டல்களும் அளிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் 467 பொலிஸ் நியைங்களில் ஆகக் கூடியதான 50 கிராம சேவையாளர் பிரிவுகளில் கடந்த மாதம் 30 ஆந் திகதி இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது நாட்டிற்கான ஒற்றுமைக்கான வேலைத் திட்டமாகும். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் இந்நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் ஏற்படாது.
சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் பொது மக்களுக்குமிடையே நல்லதொரு உறவினை கட்டியெழுப்ப முடியும். இதன் மூலமாக தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். இந்த ஆண்டில் 70 வீதமான குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முற்றாக தீர்த்து வைக்கப்படும். அதற்காக உரிய பணிப்புரைகளை வழங்கி வருகின்றேன். தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கையை 25 சத வீதமாக இணைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம். வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்தின் மொழி உதவிப் பிரிவிற்கு உதவிகளை வழங்க முடியும்.
தமக்குத் தெரிந்த மொழியில் தொலைபேசி மூலமாகவும் குறுஞ் செய்திகள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அதே மொழியில் உரிய பதில்களையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இளைஞர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், அரச அதிபர்கள், கிராம சேவையாளர்கள் அனைவரும் நாம் பொது மக்களை இலகுவாக சென்றடைய உதவி புரிய வேண்டும். உங்களுடைய செயற்பாடுகள் நாங்கள் வினைத்திறனுடன் கடமையாற்றுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். பொலிஸார் உங்களுக்காகவே கடமையாற்றுகின்றன என்றார்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் முன்னர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டு மட்டக்களப்பில் பணியாற்றியதாகவும். 'கிறீஸ் பேய்' உலாவிய காலத்தில் நிலமையை கட்டுப்படுத்த இவர் பல ஏற்பாடுகளைச் செய்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இலங்கையில் முறையான பொலிஸ் சேவை 1866 ஆம் ஆண்டின் செப்டம்பெர் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் நாட்டில் 47 பொலிஸ் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், 585 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் சேவையாற்றினர். மற்றும் முதலாவது பொலிஸ்மா அதிபராக வில்லியம் ரொபர்ட் கெம்பெல் நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும், தற்போதைய பொலிஸ்மா அதிபரின் கீழ், சகல தரங்களையும் சேர்த்து 84,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் சேவையில் உள்ளார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |