Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவொரு முரண்பாடும் ஏற்படக்கூடாது : ஜனாதிபதி

மொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவொரு முரண்பாடும் ஏற்படக்கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள பல நாடுகளில் இடம்பெறுவது போன்று முரண்பாடுகளால் எமது நாட்டின் வரலாற்றிலும் முரண்பாடுகளால் பேரவலம் ஏற்பட்டது. மொழியானது மனிதாபிமானத்தின் குரலாக இருக்கவேண்டுமே தவிர மொழி ரீதியில் வகுப்புவாதமோ, வளப்பகிர்வில் அநீதியோ இடம்பெறக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (23) முற்பகல் கண்டி தர்மராஜ கல்லூரியில் அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மொழியையும் பேசுபவர் தனது மொழியிலேயே நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த உரிமையை மேலும் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இனத்துக்கும் தாய்மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகளை வழங்குவது அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் சிங்கள மொழியையும் சிங்களப் பிள்ளைகள் தமிழ் மொழியையும் கற்பதற்கு கல்வி அமைச்சின் ஊடாக பௌதீக மற்றும் மனித வள மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழிப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ்களையும், பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார். இமய மலையில் அதிக உயரத்துக்கு ஏறுவதற்கு தமக்கு ஜனாதிபதி அவர்கள் நல்கிய அனுசரணைக்காக கண்டி தர்மராஜ கல்லூரியின் சாரணர் அணியினால் விசேட நினைவுப் பரிசு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, ரவுப் ஹக்கீம், கல்வி ராஜாங்க அமைச்சர் பி.ராதாகிருஸ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்கள். அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் நிகழ்வில் முதற் தடவையாக பங்குபற்றிய அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments