Home » » கண் இருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு வரிசையில் நிற்க கண் தெரியாதவர்கள் எமது மண்ணில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்!

கண் இருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு வரிசையில் நிற்க கண் தெரியாதவர்கள் எமது மண்ணில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்!

இந்த பூமிப்பந்தில் இறைவனின் படைப்பாலும் எமது மண்ணில் ஏற்பட்ட இடரினாலும் எம்மில் பல உறவுகள் தங்கள் விழிப்புலன்களை இழந்தவர்களாகவுள்ளனர். இது வேதனை தரும் விடயம் தான். இருந்தாலும் பல விழிப்புலன் அற்றவர்கள் இன்று சாதரண மனிதர்களை விட சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பதும் பலர் கண் இருந்தும் குருடர்களாக வாழ்கின்றார்கள் என்பதும் உண்மையே. இவர்கள் தொடர்பாகவும் இவர்களுக்குள்ள உரிமைகள் தொடர்பாகவும் எம்மில் பலருக்கு இன்றும் தெரியாது. இதனால் இந்த விழிப்புலனற்றோர் இயல்பாக தமது உரிமைகளுடன் வாழமுடியாது கஸ்ரப்படுகின்றமையை யாரும் மறுக்கவும் முடியாது.
இந்த விழிப்புலனற்றவர்களின் அடையாளச் சின்னம் வெள்ளைப் பிரம்பு. இதனை விழிப்பூட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெள்ளைப்பிரம்பு தினம் கொண்டாடப்படுகிறது.
1931 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிமாக்கழகம் முதன்முதலாக வெள்ளைப்பிரம்பை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் 1969 இல் எமது நாட்டின் விழிப்புலனற்றோர் சம்மேளனம் விழிப்புலனற்றோர் மாநாடு ஒன்றினைக் கூட்டி வெள்ளைப்பிரம்பு தினத்தை சர்வதேச தினமாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இது எமது நாடு விழிப்புலனற்றவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனாலும் எம்மில் பலருக்கு அது தொடர்பான தெளிவு இன்றும் ஏற்படவில்லை.
தமது பார்வையை முழுமையாக இழந்தவர்கள், 5 வீதம் மற்றும் 10 வீதம் போன்ற குறுகிய வீதத்தில் பர்வையைக் கொண்டவர்களை விழிபுலனற்றவர்கள் என்கிறோம். விழிபுலன் அற்ற வகையில் 500 பேர் வரையில் வடமாகாணத்தில் இருக்கின்றனர். இவர்கள் சமூகத்தில் உள்ள சாதாரண மனிதர்களைப்போல எல்லா உரிமைகளையும் கொண்டவார்கள். குறிப்பாக அரசியலில் ஈடுபடுதல், கல்விகற்றல் விளையாடுதல் என பல உரிமைகள் இவர்களுக்கு இருக்கின்றது. இருந்தும் அவர்களை ஈடுபடுத்துவது, அல்லது அவர்களை ஈடுபட தூண்டுவது என்பது குறைவாகவே உள்ளது.
இவர்களை பரிதாபமாக எமது சமூகம் பார்க்கின்ற நிலைகளும் உள்ளது. ஆனால் தற்போது இந்த விழிபுலனற்றவர்கள் சாதாரண மனிதர்களைவிட பல சிறப்பான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
விழிப்புணர்வற்றோருக்கான செயற்பாடுகளை பலவாறு ஏற்படுத்தியிருந்தாலும் விழிப்புணர்வற்றோருக்கு உள்ள சட்டங்கள் தொடர்பில் போதுமான விளக்கம் இன்மை மக்களிடமும் ஏன் அவர்களிடமும் கூட காணப்படுகின்றது. அதாவது, வீதியில் விழிப்புணர்வற்றவர் வெள்ளைப்பிரம்புடன் செல்லும்போது வாகனங்களை அவதானமாக செலுத்த வேண்டும். அவர் வீதியில் எவ்விடத்திலும் வீதியை கடப்பதற்காக தனது வெள்ளைப்பிரம்மை நீட்டினாலும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பேரூந்தை மறிக்கும் போது அது பஸ் தரிப்பு நிலையம் இல்லாவிட்டாலும் நிறுத்த வேண்டும். ஆனால் இவ்வாறான அவர்களுக்குரிய சின்ன சின்ன விடயங்களில் கூட மக்களுக்கு தெளிவில்லாத நிலையுள்ளது. இவ்வாறான விழிப்புணர்வற்றவர்கள் மீது நடத்தப்படும் சட்ட மீறல்களுக்கு சாதாரண தண்டணையை விட இரட்டிப்பு தண்டனையுள்ளது என்பதனையும் மக்கள் அறிந்து வைத்திருக்கவில்லை.
அத்துடன் விழிப்புணர்வற்றவர்கள் வாழ் நாள் பூராகவும் கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பாக கற்ற சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் பூரண அறிவின்மை காணப்படுகின்றது. இவர்களுக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்களுக்கான தபால் கட்டணம் இலவசமானது. இதனால் இவர்கள் வெளிநாடுகளில் இருந்தும் புத்தகங்களைப் பெற்று படிக்க முடியும்.
விழிபுலனற்றோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச பார்வையற்றோர் சங்கம், உலக சுகாதார தாபனம் என்பவற்றில் வலுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் விழிப்புணர்வற்றோருக்காக கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. அத்துடன் அனைத்து நாடுகளுமே கையொப்பமிட்ட ஒரு சாசனமும் இதுவாகவே உள்ளது. இதனால் இலங்கையும் அச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செயற்பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது.
வட மாகாணத்தில் மக்களினுடைய பங்களிப்பு மற்றும் அவர்களின் ஆர்வம் என்பவற்றினால் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு சர்வதேச தரத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. விழிப்புணர்வற்றோருகான கிரிக்கெட்போட்டி சவுண்போல் கிரிக்கட் என பெயரிட்டு நடைபெறுகிறது. விழிப்புணர்வற்றோரும் சமூகத்தில் ஆளுமையுள்ளவர்கள் என்பதுடன் அவர்கள் சாதாரண மனிதர்களை போல் அனைத்து செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடியவர்கள் என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இது இடம்பெறுகிறது.
இவ்வீரர்கள் பந்தில் இருந்து வரும் சத்தத்தை உணர்ந்து விளையாட்டில் ஈடுபடுவார்கள். அதனை பார்க்கும் போது சாதாரண வீரர்கள் பங்கேற்பது போல் அவர்கள் சத்தத்தை அடையாளப்படுத்தி விளையாடுவதை அவதானிக்க முடியும். வடக்கின் வவுனியா பொது நூலகத்தில் பார்வையற்றோருக்கான நூலகம் ஒன்று இலங்கையில் முதன்முறையாக அமைக்கப்பட்டது. இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள பார்வையற்றோருக்கான நூலகத்தில் பார்வையுள்ளோரும் பார்வையற்றோரும் ஒரே நேரத்தில் பத்திரிகையை வாசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் யாழ் நூலகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழிபுனர்வற்றவர்களுக்காக அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன. பார்வையற்றோர்களுக்கான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது 22 பேர் இலட்சக்கணக்கில் வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர். இன்று கண்தெரிந்தவர்கள் வெளிநாட்டிற்கு போவதற்கு வரிசையில் நிற்கின்றனர். ஆனால், கண் தெரியாதவர்கள் எமது நாட்டிலேயே மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். அதற்கு காரணம் நாம் வழங்கி வரும் ஒத்துழைப்பும் அவர்களின் ஆர்வமுமே ஆகும்.
அத்துடன் இவ்வாறானவர்கள் சாதாரண மனிதர்கள் செய்யும் வேலையை விட பல மடங்கு சிறப்பான வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றனர். இவ்வாறு தொழில் செய்பவர்கள் அனைவருமே தமது தொழில் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக பதிவு செய்தும் உள்ளனர்.
கடந்த 2013 இல் நடைபெற்ற வட மாகாணசபைத்தேர்தலில் கண்பார்வையற்ற ஒருவர் அரசியல் மேடைகளில் பேசியிருந்தார் உண்மையில் அவர் எக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்கு அப்பால் பார்வையற்ற ஒருவர் அரசியல் செய்வதானது இலங்கை விழிபுணர்வற்றோர் தொடர்பான செயற்பாட்டில் உயர்மட்டத்தில் உள்ளதையே எடுத்துகாட்டுகின்றது.
இதேபோல, கல்வித்துறையிலும் பலர் சாதனை செய்துள்ளார்கள். இன்று பல்கலைக்கழகத்திற்கு பலர் சென்றிருக்கிறார்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் கூட சித்தியடைந்துள்ளனர்.
சமூகம் பார்வையற்றவர்களுக்கு உள்ள உரிமைகளை புரிந்து அதன்படி அவர்களை வாழ வழிவிடுமாகவிருந்தால் அவர்கள் பல சாதனைகளை செய்து எமக்கு முன்மாதிரியானவர்களான செயற்பாடுவார்கள் என்பதே உண்மை. சமூகத்தில் எங்களில் ஒருவராக வலம் வரும் இவர்களும் சாதனை புரிந்துள்ளார்கள். புரிந்து வருகிறார்கள். எனவே, எமது சமூகம் தம்மையும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுவே அவர்களின் அவவாவாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |