யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் கொலைக்கு நியாயமான நீதி கிடைக்கவேண்டும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொலிசாருக்கு எதிராக கிழக்கு பல்கலை. தமிழ் மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் பல்கலை.யின் பிரதான வாயில் முன்பாக இடம்பெற்றது.
பொலிஸ்மா அதிபரே கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் எதற்கு பொலிஸ் நிலையம்?,
எமது வரிப்பணமே எம்மைக் கொல்கின்றது,
மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வேண்டுமா?,
போக்குவரத்து பொலிசாருக்கு எதற்கு 600சிசி மோட்டார் சைக்கிள்,
போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் திருமலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பல மணி நேரமாக திருமலை வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட போதும் போக்குவரத்து பொலிசார் எவரும் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வரவில்லையென்பதுடன் வந்தாறுமூலை அம்பலத்தடியில் பொலிசார் கடமையில் நின்றுகொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் வருகைதந்த போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களினால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளக்கூடாது என தெரிவித்தே திருப்பியனுப்பியதாக தெரிவித்தனர்.
பல்கலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் அல்லது எந்தவொரு நிகழ்வாக இருக்கும்போதும் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் தமிழ் மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின்போது எந்தவொரு பொலிசாரும் விரவில்லையென்பதுடன் பல்கலை.யில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோத்தர்களே போக்குவரத்து பொலிசாரின் கடமையை செய்தமையை அவதானிக்க கூடியதாகயிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் மாணவர்களும் தலையில் கறுப்பு பட்டி அணிந்து, வீதியெங்கும் கறுப்பு கொடி பறக்கவிட்டு, உயிரிழந்த மாணவர்களின் உருவப்படம் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மிகவும் ஆக்ரோசமான முறையில் 'யாழ் மாணவர்களை சுட்டுக்கொன்ற பொலிசாரை தூக்கிலிடு தூக்கிலிடு' போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
இதன்போது சிங்கள மாணவர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தின்போது கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் லங்காசிறி சேவைக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.
0 Comments