தமிழர் தேசத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் மீண்டும் பரபரப்பு பேச்சுக்கள். ஜெனீவாவுக்கான பயணங்கள். சர்வதேச இராஜதந்திரிகளை அரசாங்க தரப்பும், தமிழர் தரப்பும் சந்தித்தல். ஐ.நாவுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதா என பொறுப்புக் கூறல் என பரபரப்பாக அடுத்து வரும் நாட்கள் நகரப் போகின்றது. இதற்காக அரசாங்கம் தன்னை முழு அளவில் தயார்படுத்தி வருவதுடன் சர்வதேச அழுத்தத்தை தணிக்கும் தீவிர முயற்சியிலும், இராணுவத்தை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. படைத்தரப்புக்களைச் சந்தித்து கருத்துக்களைப் பெற்ற அரசாங்கம் அடுத்த கட்ட நகர்வுக்காக ஜெனீவா கிளம்புகிறது. மஹிந்தா அரசாதங்கத்தின் காலத்தில் இருந்த அழுத்தங்களை குறைந்த புதிய நல்லாட்சி அரசாங்கம் கூட ஐ.நாவுக்கு வழங்கிய உறுதி மொழிகளை எட்டு மாதங்கள் கடந்த நிலையில் நிறைவேற்றவில்லை. இருப்பினும் அதனையும் சமரசம் செய்து சர்வதேசத்தின் அழுத்த்தில் இருந்து விடுபட தீவிர முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. ஆனால் தீர்வுக்காக போராடி யுத்தத்தால் பாதிப்படைந்த தமிழர் தரப்பு மாறிவந்த சர்வதேச சூழலை சரியாக பயன்படுத்தாது கோட்டைவிடும் நிலையே ஏற்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் தலைமைத்துவ கட்சியாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகளும் பொறுப்பற்ற தன்மைகளும் அவற்றையே வெளிப்படுத்தியும் நிற்கின்றது. ஜெனீவா செல்வதற்காக அரசாங்கம் தன்னை தயார் படுத்திய அளக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய தயார்படுத்தல்கள் அமையவில்லை. சர்வதேச இராஜ தந்திரிகளை சந்திப்பதற்காக தற்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேசியுள்ளார். அங்கிருந்து ஜெனீவாவுக்கும் செல்லவுள்ளார். அவருக்கு எதிராக புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் சில ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்திருக்கின்றது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்கள் நலன் சார்ந்த கூட்டமைப்பின் செய்தியுடன் தான் அமெரிக்கா சென்றுள்ளாரா..? அல்லது தமிழ் தரப்பின் ஆளும் வர்க்க பிரதிநிதியாக சென்றுள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தற்போது தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் என்னும் நான்கு கட்சிகளின் கூட்டு. அந்தக் கட்சிகளின் தலைமைகளுடன் ஜெனீவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. மறுபுறம் தமிழரசுக் கட்சியின் தலைவர் கூட சூழ்நிலை கைதியாக இருக்கிறார். இவ்வறான ஒரு சூழ்நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒரு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தலைவர் இரா.சம்மந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அந்த அறிக்கையை ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தார். ஏனைய பங்காளிக் கட்சித் தலைவர்கள் மௌனமாகவே இருந்தனர்.
இந்த கடிதத்தின் எதிரொலியாக கடந்த 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் குறித்து பேசப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்ட இரா.சம்மந்தன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு யால்ரா அடித்துவிட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் வந்துள்ளார்கள். தற்போதைய சூழலில் 25 ஆம் திகதி ஒருங்கிணைப்ர்க்குழு கூட்டத்தை கூட்டுவதால் இவர்கள் எதை சாதிக்க போகிறார்கள். ஏனெனில் தற்போது ஜெனீவா அமர்வு ஆரம்பமாகியுள்ளது. 27 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். 29 ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இந்நிலையில் 25 ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை யாரிடம் தெரிவிப்பது. கூட்டமைப்பு சார்பாக சென்ற சுமந்திரன் கூட மீண்டும் வந்து விடுவார். ஆக மொத்தத்தில் 25 ஆம் திகதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வெறும் கண்துடைப்புக் கூட்டம் மாத்திரமே. இந்த விடயத்தில் பங்காளிக் கட்சிகளின் மௌனம் கூட தமிழரசுக்கட்சிகள்குள் அவர்களது சராணகதி அரசியலையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஐ.நா அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுமந்திரன் அவர்களின் விஜயம் குறித்து பங்காளிக் கட்சிகள் மௌனமாக இருப்பது அவர் கூட்டமைப்பு சார்ந்த பிரதிநிதியாகவே சென்றுள்ளார் என்றே கருத இடமுண்டு. இந்த விடயத்ல் தனித் தமிழீழம் கேட்ட பங்காளிக் கட்சிகள் தட்டிக் கேட்க திரானியற்றவர்களாக இருக்கிறார்களா அல்லது சாதாகமா வந்தால் ஏற்றுக் கொள்வது, தவறாக வந்தால் அது தழிழரசுக் கட்சியின் முடிவு நாங்கள் இல்லை என்ற இரட்டை நிலைப்பாட்டில் இருக்கின்றார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
தனிநபர்களும், சில குறிப்பிட்ட நபர்களும் எடுக்கும் தீர்மானம் குழப்பங்களையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பட்ஜெட் வாக்கெடுப்பு விடயம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயம் என்பவற்றில் கையாண்ட முறை கூட ஒரு உதாரணம்.
இலங்கையில் பாரிய அழிவுகளுடன் நடந்த இறுதியுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் மஹிந்தா அரசாங்கம் வெற்றி கொண்டிருந்தது. ஆனால் யுத்த்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகளின் நலன்சார்ந்து மஹிந்தா அரசாங்கம் செயற்பட முன்வரவில்லை. இதனால் நிலைமை தலைகீழாகி தென்னிலங்கையின் மேற்குல சார்ப்பு கொள்கை கொண்ட ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தா அணிக்குள் பிளவை ஏற்படுத்தி மைத்திரி என புதிய கூட்டு உருவாக்கப்பட்டு அதனை பலப்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் இணைந்து சர்வதேச முதலாளித்துவ நாடுகள் மஹிந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதனால் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கு சாதாகமாக இருந்த அரசியல் சூழல் சற்று குறைவடைந்து ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் ஜெனீவா விவகாரம் சூடு பிடித்துள்ளது. மேற்குலக முதலாளித்துவ நாடுகளால் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றத்திலும் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தென்னிலங்கையின் முதலாளித்துவ தலைவர்களுடன் தமிழர் தரப்பின் ஆளும் வர்க்க தலைவர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் அவர்களை கரம் கோர்க்கச் செய்து இதனை சமரசமாக தீர்க்க முற்படுகிறது மேற்குலக முதலாளித்துவம்.
அதற்கான காய்நகர்தல்களை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் செய்தும் வருகின்றன. வடக்கு- கிழக்கு இணைப்பு, போர்குற்ற விசாரணை என்பவற்றை கைவிட்டு ஒரு தீர்வுத்திட்ட பொதி ஒன்றை நடைமுறைப்படுத்த திரைமறையில் காய்நகர்தல்கள் நடந்தும் வருகின்றது. அதற்கு கூட்டமைப்பின் தலைமை ஆதரவும் வழங்கவுள்ளது. ஆக மேற்குலகம், தென்னிலங்கை, தமிழர் தரப்பு ஆளும் வர்க்க கைக் கோர்ப்பு என்பது தமிழர் தரப்புக்கு 60 வருட போராட்டத்திற்கான ஒரு தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை. மாறாக எதிர்காலத்தில தமிழர் தரப்பு ஒற்றுமையை சீர்குலைத்து தேசிய கட்சிகளின் கீழான ஒரு சரணாகதி நிலையை உருவாக்க வாய்ப்புள்ளது.
ஏனெனில் தமிழரசுக்கட்சி ஆக தமிழர் தரப்பு போராட்டம் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டனியாக மாற்றமடைந்து தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் ஆயுதம் எந்தும் நிலைக்கு வழியேற்படுத்தியிருந்தது. பின்னர் ஆயுதப் போராட்டங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர் அரசியல் மீண்டும் தமிழரசுக் கட்சிக்குள் வந்து நிற்கின்றது. ஆக மொதத்தில் இந்த பிரச்சனையை உருவாக்கிய தமிழரசுக் கட்சியே அதனை தானே தீர்த்து வைத்ததாகவும் காட்ட முயல்கிறது. அதன் வெளிப்படுகளே பங்காளிக் கட்சிகளின் கருத்துக்கள் பெறப்படாது தமிழரசுக் கட்சி ஜெனீவா விவகாரத்தை தனித்து கையாள்வது. எனவே கிடைப்பதைப் பெற்று தொடர்ந்து போராடுவோம் என்ற அடைப்படையில் தமிழரசுக் கட்சி நகர்த்த உள்ள மேற்குல, தென்னிலங்கை, தமிழ் நிலப்பிரவுத்துவ கூட்டு பங்காளிகளின் இருப்பையும், 60 வருட போராட்டத்தையும் கேள்விக்குட்படுத்த வாய்ப்புள்ளது.
0 Comments