இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பால்நிலைச் சமத்துவம் மற்றும் சமனிலைக்கான அலகு நல்லையா மண்டபத்தில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சார்பில் கலாநிதி விஜய ஜெயதிலக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரி.ஜெயசிங்கம், உபவேந்தரின் ஆலோசகர், வாழ் நாள் பேராசிரியர் கலாநிதி உமா குமாரசுவாமி, பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி இ.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பல்கலைக் கழக பேரவை உறுப்பினர்கள், திருமலை வளாகம், சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி உள்ளடங்கலான கிழக்குப் பல்கலைக் கழகச் சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பால்நிலைச் சமத்துவம் மற்றும் சமனிலைக்கான அலகானது வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி உமா குமாரசுவாமியின் முயற்சியினால் உருவாக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய வடிவமாகும்.
இதன் தேவையறிந்து, அவசியமறிந்து இலங்கைப் பல்கலைக்கழக ஆணைக்குழு இதற்கான ஒரு நிலைக் குழுவொன்றை அமைத்துள்ளது. பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கிக் கொள்ளப்படும் மாணவர்கள் அதிகமாகப் பகிடிவதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர்.
இந்த பாரிய பிரச்சனையை அடியோடு அழிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலும் அது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் இவ்வாறான குற்றங்களுக்கான முறைப்பாடுகளை வழங்கும் பொறிமுறைகளைக் கட்டமைத்தல் என்பனவும் இந்நிலையத்தின் முக்கிய செயற்பாடுகளாகும்.
0 Comments