Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தோனேஷிய கடற்கரையில் பரிதவிக்கும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

இந்தோனேஷிய கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா., அகதிகள் ஆணையத் தலைவர் ஃபிலிப்போ கிராண்டிக்கும், பிரதமர் மோடிக்கும் இன்று அவர் அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில், ”2009 ஆம் ஆண்டு, இலங்கை ராணுவம் நடத்திய கோரமான படுகொலைத் தாக்குதல்களில் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை நடந்து முடிந்தபின்னரும், அதனுடைய பின் விளைவான துன்பமும், துயரமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இன்றைக்கும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றது.
காணாமல் போன ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் ராணுவ முகாம்களிலும், சிறைகளிலும் வாடுகிறார்கள். இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட எண்ணிய தமிழர்கள், வேறு நாடுகளுக்குச் சென்று, அதிகளாகத் தஞ்சம் பெறும் நோக்கத்தில் கடல் வழியாகப் படகுகளில் பயணிக்கின்றார்கள்.
அப்படி ஆஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட ஒரு படகின் இயந்திரங்கள் பழுது அடைந்ததால், இந்தோனேஷிய கடற்கரையை ஒட்டிய கடலில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உதவி கேட்டு அவலக்குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தோனேஷிய அரசு அவர்களுக்கு உணவு வழங்கி இருக்கின்றது. ஆனால், தங்கள் நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கு அனுமதிக்கவில்லை. வாழ்வதா? சாவதா? என்று புரியாமல், தமிழர்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றார்கள்.
சிரியா உள்ளிட்ட மத்திய தரைக் கடல் நாடுகளில் இருந்து உயிர் பயத்தால் ஏராளமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்ற அய்லான் என்ற இரண்டு வயதுச் சிறுவன், கிரேக்கக் கடற்ரையில் பிணமாகக் கிடந்தது, உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் மனிதாபிமானத்தோடு அகதிகளாக வருகிறவர்களை, குறிப்பாக பெண்கள் சிறுவர்களைப் பாதுகாத்துத் தஞ்சம் கொடுக்கின்றன.
அதுபோல, இந்தோனேஷிய கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை, இந்தோனேசிய நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கும், மனிதாபிமானத்தோடு அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தோனேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments