தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
இன்று(15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 23 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே இரண்டாவது வாசிப்பு மற்றும் மூன்றாவது வாசிப்பு என்பனவும் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இது பற்றியதாகவே முழுநேர விவாதமும் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டில் தகவல் அறியும் சட்டமூலத்தினை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான பல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் அது நடைபெறவில்லை. ஆனால் தற்போதய நல்லாட்சியில் கடந்த மார்ச் மாதம் தகவலுக்கான உரிமை பற்றிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய தினமே முதலாவது வாசிப்பும் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அச்சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பும் மூன்றாம் வாசிப்பும் நடைபெறவுள்ளது என அமைச்சர் மேலும் சுட்டிக் காட்டினார்.
0 Comments