கிழக்கு மாகாணக் கல்விசாரா சிற்றூழியர் சேவையின் கீழ் ஒரே பாடசாலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றி வருகின்ற அலுவலர்களுக்கான வருடாந்தஇடமாற்றம் 2017.01.01 அன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கையை கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் நேற்று (15) தான் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், 'ஆய்வுகூட உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள், பாடசாலைப் பணியாளர்கள், பாடசாலைக் காவலாளிகள், சமையற்காரர்கள் உள்ளிட்டோருக்கே இந்த இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
இந்த இடமாற்றம் வலயங்களுக்கு இடையிலான இடமாற்றம், வலயங்களுக்கு உட்பட்ட இடமாற்றம் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் செய்யப்பட்ட மாகாணப் பாடசாலை மற்றும் தேசிய பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்ற சிற்றூழியர்கள் தொடர்பான இடமாற்றங்கள் யாவும் அந்தந்த வலயங்களால் உருவாக்கப்படும் இடமாற்ற சபையால் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை, வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் யாவும் இந்த அமைச்சால் உருவாக்கப்படும் இடமாற்ற சபையால் மேற்கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் யாவும் இந்த சுற்றறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஊழியர் தொடர்பிலும் உண்மையான தகவல்களை வழங்குவது அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பாகும். பிழையான அல்லதுமுழுமையற்ற தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருமிடத்து அது தொடர்பில் குறித்த அதிபர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை நடைமுறைப்படுத்த மாகாணப் பணிப்பாளரினதும் வலயக் கல்விப் பணிப்பாளர்களினதும் அதிபர்களினதும் பூரண ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments