Advertisement

Responsive Advertisement

கல்முனையில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுலக்சனா மேலதிக தகவல்கள்

நாட்டிலே பல பாகங்களிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற பல சம்பவங்கள் நாளுக்கு நாள் மூலை முடுக்குகளிலெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள், தற்கொலைகள் மற்றும் சிலரின் தேவைக்காக வேண்டி திட்டமிடப்பட்ட படுகொலைகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
இன்று இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறினாலும் கொலைகளும், படுகொலைகளும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் வருகின்றது.
நாட்டில் எந்தவோர் மூலையிலும் பெண்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் துன்பகரமான சம்பங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
பாதுகாப்பும், தப்புக்கான தண்டனைகள் வழங்கப்படுகின்ற விடயங்கள் அதிஉச்சமாக இருந்திட்டபோதிலும் தப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
அந்த வரிசையில்தான் கடந்த சனிக்கிழமை (27.02.2016) கல்முனையிலே நிகழ்ந்த கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுலக்சனாவின் படுகொலையும் ஒன்றாகும்.
காதல் திருமணம் செய்து கொண்டு திலீபனை கரம்பிடித்து சந்தோசமாக வாழ்க்கை நடத்திவரும் காலப்பகுதியிலே ரீ.மயுஸ்லி எனும் ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்து (தரம் மூன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்), அவரது சொந்த ஊரான நற்பிட்டிமுனையில் இருவருமாக பேணி வளர்த்து வாழ்ந்து வருகின்ற வேளையிலேதான் சுலக்சனா படுகொலை செய்யப்பட்டார்.
ஒவ்வொருவரும் தாங்கள் வழமைபோன்று தங்களது கடமைகளை முடித்து விட்டு தொழிலுக்குச்செல்ல முற்படுவது வழமை. அதுபோன்றுதான் சுலக்சனாவும் அன்று சனிக்கிழமை காலையில் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் இருந்து தனது காரியாலயத்திற்கு சென்றார்.
இந்த நிலையில், அன்று பகல் 2.30 மணிக்குப்பின்னர் அவர் தொழில் புரியும் அதே காரியாலயத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கல்முனை பொலிசாரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒரு கனம் கல்முனை மாநகரையே அதிர வைத்ததுடன் மனித நேயமுள்ள அனைவரது மனங்களையும் நெகிழ வைத்திருந்தது.
தனது வீட்டில் இருந்து புறப்படுகின்றபோது தன்னுடைய மகளுக்கு உணவு கொடுங்கள் என்று தன்னுடைய தாயிடம் கூறிவிட்டு நான் பகல் உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று கூறித்தான் தனது வேலைத்தளத்திற்கு சனிக்கிழமை என்றும் பொருட்படுத்தாமல் தனது கடமையின் நிமிர்த்தம் புறப்பட்டுச்சென்றாள்.
அங்கு சென்று தனது கடமைகளை கண்ணியமாக செய்து கொண்டிருந்தவேளையில் தன்னுடன் தொழில் புரியம் இன்னுமொரு வெளிக்கள உத்தியோகத்தர் தான் பகல் உணவிற்காக சென்று வருகின்றேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அதனை சாதகமாக பயன்படுத்திய முன்னாள் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனி கூட்டுத்தாபனத்தின் முகாமையாளரான 41 வயதினை உடைய நற்பிட்டிமுனை மயான வீதியில் வசித்து வரும் பொன்னம்பலம் உதயகுமார் என்பவர் தனது தேவையின் நிமிர்த்தம் அந்தக்காரியாலயத்திற்குள் பல முறை சென்று வந்திருப்பதாக அவரை நேரில் கண்டோர் கூறினார்கள்.
தன்னுடைய கடமையை அன்றாடம் செய்வது போன்று அன்று சனிக்கிழமையும் செயற்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் சந்தேக நபரான உதயகுமார் அவரை தாக்கி கத்தி கொண்டு கழுத்தை வெட்டியிருக்கின்றார் என்பது முதற்கட்ட விசாரணையின் போது கிடைத்த தடயங்கள் மூலம் அறிய முடிவதாக பொலிசார் தெரிவித்தனர்.
சூட்சுமமான முறையில் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையானது எதற்காக நடத்தப்பட்டது என ஆராயுமிடத்து தன்னுடைய பணமோசடியை மறைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு கொலையாகவே இருப்பதாக நோக்க வேண்டியிருக்கின்றது என்பது பலரது கருத்துமாகும்.
முன்னர் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனி கூட்டுத்தாபனத்தில் முகாமையாளராக கடமைபுரிந்த நற்பிட்டி முனையைச்சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் தான் கடமையாற்றிய காலத்தில் பண மோசடி செய்ததாகவும்,
அதனை மறைப்பதற்காகவே இந்த கொலையை செய்திருப்பதாகவும் ஏற்கனவே மட்டக்களப்பு அலுவலகத்தில் 8 வருடங்கள் தனது கடமையை செம்மையாக செய்த சுலக்சனா கல்முனை அலுவலகத்திற்கு 10 நாட்களுக்கு முன்னரே முகாமையாளர் கடமைக்காக இடமாற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்காகவே தனது உறவுக்காரியான சுலக்சனாவுடன் உரையாடச்சென்றிருக்கலாம் எனவும் அது கைகூடாத பட்சத்தில் முகாமையாளர் சுலக்சனாவை படுகொலை செய்திருக்கலாம் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
எது எவ்வாறிருந்தாலும் இங்கு நடைபெற்ற கொலை என்பது மிகவும் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலையாகவே எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
அலுவலகத்திற்குள் சென்ற சந்தேகத்திற்கிடமான கொலையாளி சுலக்சனாவுடன் சுமூகமான உரையாடலுக்காக சென்றிருப்பாரேயானால் எதற்காக தனியாக சென்றிருக்க வேண்டும். அத்துடன் யாருமே இல்லாத நேரம் பார்த்து அங்கு அவர் உள் நுழைந்ததன் மர்மம் என்ன?
அல்லது அந்த அலுவலகத்திற்குள் கொலையுண்ட சுலக்சனா மாத்திரம்தான் இருக்கின்றார் என்பதனை யாரும் அவருக்கு தெரியப்படுத்தினார்களா?
அன்று சனிக்கிழமை என்ற காரணத்தினால் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வரவும் குறைவாகவே இருந்திருக்கும். அதனையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற பல கேள்விகளும் எழும்பத்தான் செய்கின்றன.
பின்னர் கொலையுண்டவருடன் கடமையில் இருந்த இன்னுமொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவு உண்பதற்கு சென்று மீண்டும் அலுவலகத்திற்குள் வந்து பார்த்தபோது குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடப்பதை கண்டு கல்முனை பொலிசாருக்கு அறிவித்திருக்கின்றார்.
அவரது அறிவித்தலை செவிமடுத்த கல்முனை பொலிசார் கொலையுண்ட இடத்திற்கு விரைந்து சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முடக்கிவிட்டிருந்தார்கள்.
பொலிசாரினதும் பொலிஸ் புலனாய்வாளர்களினதும் துல்லியமான விசாரனையின் காரணமாக சந்தேகத்திற்கிடமான முறையில் கொலையாளி கைது செய்யப்பட்டிருந்தார்.
கொலைசெய்தவரை இலகுவாக கண்டு பிடிப்பதற்கான தடயங்களை கொலையாளி விட்டுச்சென்றதன் காரணமாக பொலிசார் கொலை நடந்து சில மணி நேரங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான முன்னால் முகாமையாளரான உதயகுமாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தார்கள்.
அவரை இலகுவாக கைது செய்வதற்கான தடயங்களை புலனாய்வாளர்கள் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டிருந்தார்கள். இதற்கான அனைத்து வழிநடத்தல்களையும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபாரின் நேரடி வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுலக்சனாவை கொலை செய்த இடத்தில் கொலை செய்ய வந்தவரின் தலைக்கவசம் கைவிடப்பட்டிருந்தது. படுகொலை செய்யப்பட்ட சுலக்சனா தனது உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது கொலையாளியின் கைவிரலை கடித்திருக்கின்றார்.
அப்போது அவரது கைவிரல் கடிபட்டு அவரது நகம் கொலையுண்டவரின் வாய்க்குள் அகப்பட்டிருந்திருக்கின்றது. அதனை பொருட்படுத்தாத கொலையாளி அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றிருக்கின்றார் என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழும்பத்தான் செய்கின்றது.
சுலக்சனா கொலையுண்ட செய்தியினை கேள்வியுற்ற கல்முனை மாநகர மக்கள் இன, மத, பேதம் பாராது அங்கு திரண்டிருந்தார்கள். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கொலை செய்த சூத்திரதாரியை கண்டு பிடிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.
அனைவரது ஒத்துழைப்பையும் நாடிய கல்முனை பொலிசார் உடனடியாக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு கொலையுண்ட செய்தியை தெரியப்படுத்தியிருந்தார்கள்.
அதன்பின்னர் அம்பாறையில் இருந்து மோப்ப நாய்களுடன் பொலிசார் அங்கு வந்து மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகத்திற்கிடமான கொலையாளியை கண்டு பிடித்திருந்தார்கள்.
கொலையுண்டவரின் உறவினர் என்ற காரணத்தினால் சந்தேகத்திற்கிடமான கொலையாளியும் சனக்கூட்டத்திற்குள் ஒருவராக நின்றிருக்கின்றார். அனைத்து விடயங்களையும் மிகவும் அவதானமாக அவதானித்திருந்த பொலிசார் அவரது கையில் காயமொன்று இருப்பதனை தெரிந்து கொண்டார்கள்.
பின்னர் அது தொடர்பாக அவரிடம் கேட்டபோது தனது வீட்டில் வேலை செய்யும்போது கையில் காயம் ஏற்பட்டது என்று கூறியிருந்தார். அதனை கேட்ட பொலிசார் உடனடியாக அவரது வீட்டிற்குச்சென்று நிலைமைகளை அவதானித்து அங்கிருந்தவர்களிடம் அது பற்றி விசாரித்திருந்தார்கள்.
அவர்கள் அவ்வாறான எந்த வேலையும் வீட்டில் நடைபெறவில்லை என கூறியதை அடுத்து பொலிசார் தகவலை பொறுப்பதிகாரியிடம் தெரியப்படுத்தவே கொலை செய்யப்பட்டவரது வாயை சோதனை செய்திருந்தார்கள்.
அப்பேதே அவரது நகம் இருந்தது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான கொலையாளி கைது செய்யப்பட்டு அம்பாறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதன்பின்னர் கொலையுண்டவரும் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளித்தார்கள்.
தற்போது சந்தேகத்திற்கு இடமான கொலையாளி நீதிமன்ற தீர்ப்பின் படி 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் கல்முனை பொலிசாரினால் கொலை சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் நாட்டிலே நடைபெறும் இவ்வாரான கொலைகள், கொள்ளைகள், பாலியல் துஸ்பிரயோகங்களை இல்லாமல் செய்யும் கடப்பாடு அனைவரிடத்திலுமே இருத்தல் இன்றியமையாததொன்றாகும்.
அதனை தடுத்து நிறுத்தவதற்கு பாடசாலைகள், மதத்தலங்கள் என்பன சமய விழுமியக்கருத்துக்களை ஆரம்பத்திலிருந்தே ஊட்ட வேண்டும்.
குறிப்பாக குடும்பமும் இதில் மிக முக்கிய பங்கெடுத்து சேவையாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமான தேவையுமாகும்.

Post a Comment

0 Comments