Advertisement

Responsive Advertisement

நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர்!- காணாமல் போனோரின் உறவுகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சுதந்திர தினத்தன்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் நடாத்த முடிவு செய்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவின் அருகில் நடாத்தப்படவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
“நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர் ” என்ற துயர் நிறைந்த வாசகங்களுடன் காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது அவலத்தை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுவதற்கே நாளைய சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து போராட்டம் நடத்தவுள்ளதாக காணாமல் போனோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் நாளையதினம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து அமைப்புக்களும் கறுப்புப் பட்டியணிந்து கலந்துகொள்ளுமாறு தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் மாவட்டத்தில் உள்ள சகல பொது அமைப்புக்களும் வர்த்தக சங்கத்தினரும், ஓட்டோ சாரதிகள் சங்கத்தினர், பல்கலைகழக மாணவர் அமைப்புக்கள், மனிதவுரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க உதவுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments