ஜிகா வைரஸ் தொடர்பாக உலகளாவிய அவசர நிலையை ஐநா சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் பரவ தொடங்கிய இந்த நோய் தற்போது மத்திய அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளில் உள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்கினால் அதை கண்டறிவது கடினம் என்றும், அவ்வாறு வைரஸ் தாக்கப்பட்டு பிறக்கக்கூடிய குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும் பிறவிக் குறைபாடுடனும் பிறக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும், டெங்கு, சிக்குன் குனியா போல் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடிய இந்த நோய் உலகம் முழுவதும் 40 லட்சம் பேரை தாக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் எச்சரித்தது.
இந்த நிலையில் ஜிகா வைரஸ் தொடர்பாக ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு நேற்று கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது.
அப்போது, உலகளாவிய அவசர நிலை பிரகடனப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் மூலம் பணம், வளங்கள், அறிவியல் நிபுணத்துவம் போன்றவற்றை ஒன்று திரட்டவும், புதிய ஆய்வுகளைத் தொடங்கி தடுப்பு மருந்து வேகமாக கண்டுபிடிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற பொது சுகாதார நெருக்கடி நிலையை கடந்த 2014 ஆம் ஆண்டு எபோலா நோய்காக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


0 Comments