Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு, கிழக்கு மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிட்டவில்லை!– பா.அரியநேத்திரன்

இலங்கையில் 68வது சுதந்திரதினம் அனுஷடி்க்கப்பட்டுள்ள போதிலும் வடகிழக்கு மக்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லையென்பதையே நாடெங்கிலும் இன்று நடைபெற்ற காணாமல் போனோர் ஆர்ப்பாட்டம் வெளிப்படுத்தப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் காந்தி பூங்கா அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன், முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் பெருமளவான காணாமல் போனோரின்  உறவினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களும் தமது உள்ளக்கிடக்கைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர்.
2ம் இணைப்பு
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதால் மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது!
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதால் மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது என காணாமல் போனோர் குழு சார்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
இந்த 68வது சுதந்திர தினத்தில் காணாமல் போனவர்கள் அனைவரையும் இந்த அரசாங்கம் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூறவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் 2200 ற்கு மேற்பட்ட காணாமல் போனவர்கள் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தோம்.
இதுவரை 400 பெயருடைய விண்ணப்பங்களை மட்டுமே காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரித்துள்ளது.
ஏனையவர்களுக்கான விசாரணைகள் இதுவரை நடைபெறவில்லை ஏனையவர்கள் குறித்த விசாரனைகளை இவர்கள் எப்போது நடத்துவார்கள் என்று தெரியவில்லை.
எனவே இந்த காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்பது எம்மைப் பொறுத்தமட்டில் கண்துடைப்பு நாடகமே
சுதந்திர தினமான இன்று காலிமுகத்திடலில் தேசிய கீதத்தை தமிழிலே பாடுவதால் மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைத்துவிடப் போவதில்லை.
எங்களது தமிழ் உறவுகள் காணாமல் போயிருக்கின்றார்கள் என்பதைவிட அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்த அரசாங்கம் கண்டுபிடித்து தரவேண்டும்.
அண்மையில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்தோம். இந்த கருத்து கண்டிக்கத்தக்கது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களது உறவுகளுக்கு கூறியே ஆகவேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments