Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஈழத் தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் ஈழத் தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெப்ரவரி 2-ல், இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1948 ஆம் ஆண்டு, இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை இலங்கையின் ஆளுனராக இருந்த ஜெனரல் சோல்பரி தலைமையில் அமைந்த ஆணையம் உருவாக்கியது. இதில் சிங்களவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் சட்டம் வலுப்படுத்தப்பட்டது. இதே சோல்பரியே, தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்து விட்டேன் என்று பிற்காலத்தில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக காலத்தில் முதல் குடியரசு அரசமைப்புச் சட்டம் 1972 மே 22ம் திகதி கொண்டுவரப்பட்டதன் மூலம் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியான பிறகு, 1979 இல் இரண்டாவது அரசமைப்புச் சட்டம் உருவானது. இதில் இலங்கை ஒரு பௌத்த சிங்களக் குடியரசு என்பதையும், சிங்கள மொழியே அரசு மொழி என்றும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் வரையறுத்தது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியே அனைத்து உரிமைகளையும் கையிலெடுக்கும் அதிகாரம் வந்தது.
இதனை அடுத்து தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாறும் நிலை உருவாகியது. 1987 இல் இந்தியாவின் தலையீட்டில், இந்தியா- இலங்கை ஒப்பந்தம் உருவானது. அதில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் ஜெயவர்த்தன கையெப்பமிட்டபோதும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்த்தார்.
அதன் பிறகு இலங்கை உச்சநீதிமன்றம், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பதே செல்லாது என்று கூறி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்தது.
மைத்திரிபால சிறிசேன அறிவித்த புதிய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள கேடுகள்:
1. பாராளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
2. மாகாணங்கள் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது,
3. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு முழு அதிகாரங்களை வழங்க முடியாது,
4. தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
5. அதிகாரப் பரவல் முறை இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவர இயலாது.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய அரசமைப்புச்சட்டம் தமிழர்களுக்குப் பாதகமானது என்று எடுத்துக்கூறி, சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்துவாரேயானால் அதுதான் இந்த பயணத்திற்கான அழுத்தம் அர்த்தம் கொடுப்பதாக அமையும் என்பதால் அதனை வற்புறுத்த வேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.
தனி நாடு விடுதலையைக் கைவிட்டு, குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற கூட்டாட்சி முறைக்குக்கூட இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ஈழத் தமிழர்களுக்கு அறவே பாதுகாப்பு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது இலங்கை அரசு.
இந்திய அரசுக்கு இந்தக் கால கட்டத்தில் மிக முக்கிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. உலக நாடுகளின் கவனமும், தலையீடும்கூட அவசியமாகி விட்ட தருணம் இது. கட்சிகளை மறந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒத்த குரல் கொடுக்க முன் வர வேண்டும். உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பிற்கு முடிவு கட்டப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments