சிறுவர்களின் மனநிலைகளுக்கு ஏற்புடைய வகையில் பாடசாலை பாடத் திட்டங்களை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது 5 மற்றும் 6ஆம் தர வகுப்புகளுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் அதனால் பிள்ளைகள் பல அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை பிரபல பாடசாலை எண்ணக்கரு தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, சகல பிரதான பாடசாலைகளையும் பிரபல பாடசாலை மட்டத்திற்கு அபிவிருத்தி செய்து அப்பிரச்சினைக்கு தீர்வுகளை கண்டறிவது தொடர்பிலும் ஜனாதிபதி கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தான் எந்தவொரு பிரபல பாடசாலைக்கும் எந்தவொரு பிள்ளையையும் சேர்த்துகொள்வதற்கு கடிதங்கள் வழங்கவில்லை என்றும் எல்லா பாடசாலைகளையும் ஒன்று போல் அபிவிருத்தி செய்து பிள்ளைகளுக்கு சம கல்வி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதே நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதுபோன்று 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு பெற்றோர்களிடம் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக பிள்ளைகள் முகம் கொடுக்கும் அழுத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, எல்லோரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை கவனத்திற் கொண்டு அதற்கான ஒரு புதிய வேலைத் திட்டங்களையும் தயாரிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 Comments