மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் தைத்த ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கப்பட உள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.
இவற்றில் பிரதானமான நிபந்தனையாக மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இரண்டாவதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனவும், மூன்றாவதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த அருட்தந்தை சிங்கராசாவை விடுதலை செய்ய வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதமொன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பில் ஆராய்ந்து பதில் அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த 39 ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை எனவும் தற்போது மரண தண்டனை செயலிழந்துள்ளதாகவும் பதில் கடிதத்தில் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்த பழைய சட்டத்தை நீக்கிவிட்டு உலக பயங்கரவாத செயற்பாடுகள் காணப்படுவதனால் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய முடியும் என பதில் கடிதத்தில் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்கராசா அருட்தந்தை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளதாகவும் இதில் அரசாங்கம் தலையீடு செய்ய முடியாது எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்க உள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments