தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஒருநாள் நாடாளுமன்ற விவாதம் நடத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.
இது நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவின் பின்னர் எதிர்வரும் 2ம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
8 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு செப்டெம்பர் 1ம் திகதி இடம்பெற இருக்கிறது. அன்றைய தினம் காலை சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகளும், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் நடைபெறவுள்ளது.
காலை அமர்வின் பின்னர் பிற்பகல் நாடாளுமன்ற வைபவ ரீதியான அமர்வு இடம்பெறுகிறது. இதன் போது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்த உள்ளதோடு அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை செப்டெம்பர் 2 ஆம் திகதி நடைபெறும்கட்சித் தலைவர் கூட்டத்தில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான விவாதம் நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்படவுள்ளதாக அறிய வரு கிறது.
இது தொடர்பான பிரேரணையை செப்டெம்பர் முதலாம் திகதி சமர்ப்பித்து பாராளுமன்ற அனுமதியை பெற்ற பின் 2 ஆம் திகதி அமைச்சர்கள் பதவி ஏற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பில் ஒருநாள் விவாதம் நடத்துமாறு ஜே.வி.பி. கோரியுள்ளது.
இதனையடுத்தே செப்டெம்பர் 3 ஆம் திகதி தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.
0 Comments