Home » » எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூ.க்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்- சேகு இஸ்ஸதீன்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த.தே.கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் வலியுறுத்தியுள்ளார். 

இந்த முயற்சி வெற்றியளிக்காது போனால் நல்லாட்சி அரசாங் கத்திலிருந்து ஜனநாயகத்தின் பெயரால் முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமெனவும் மு.கா. ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். 
தென்கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமான முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
ஒரே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை உருவாக்கி ஒருசிலர் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக் கொண்டும், எஞ்சிய தொகையினர் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை அனுபவிப்பதற்குமாக செய்யப்படும் ஏற்பாடுகள் பாராளுமன்ற விழுமியங்களைப் பலிக்கடாவாக்கும் பாரம்பரியத்தை உருவாக்க இடமுள்ளது. 
எனவே, இரட்டைத் தலை சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்காமல் மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அது முடியாமல் போகும் பட்சத்தில் ஆட்சிக்கு வரமுன்பே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கத் தயாராகும். ஐ.தே.க.முன்னணி ஆட்சியிலிருந்து முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தின் பெயரால் வெளியேற வேண்டும். 
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஐ.தே.கமுன்ன ணியுடன் சேர்ந்து கூட்டாட்சி ஒன்றை அமைக்க தமிழர் கூட்டமைப்பு தயாராகாமல் போனது மிகவும் துரதிஷ்டவசமான அரசியல் நிகழ்வாகும். 
ஐ.தே.முன்னணி ஆட்சியைக் காலூன்றவைத்து, பலப்படுத்தி ஆரம்ப காலகட்டத்தில் இந்த நாட்டின் மொத்த நன்மைக்கான அபிவிருத்திகளைச் செய்து காட்டி மக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டு தமிழர் தரப்பு உரிமைகளையும் நியாயங்களையும் படிப்படியாக இலகுவான முறையில் வென்றெடுக்க தமிழர் கூட்டமைப்பு தாராள மனதுடனும் தளராத நம்பிக்கையுடனும் முயற்சி செய்து பார்த்திருக்க முடியும். 
ஆனால் அது உள், வெளிக்காரணங்களால் நடைபெறாமல் போயிற்று அதன் விளைவாக இன்று ஆட்சி அமைப்பதற்காக இரட்டைத் தலை சுதந்திரக் கட்சியின் காலில் ஐ.தே.முன்னணி விழுந்து கிடக்க வேண்டியுள்ளது. 
இதனால் தேசிய அரசாங்கப் பெயரின் கவர்ச்சியில் ஐ.தே.மு. தேடிக்கொள்ளப்போவது தீராத தலைவலியைத்தான் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமர் ரணிலுக்கு அதிக காலம் தேவைப்படாது. 
ஆட்சியிலமர்ந்து கொண்டும், எதிர்க் கட்சியில் இருந்து கொண்டும் சுதந்திரக் கட்சி ஆடப்போகின்ற நாடகம் ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாகவே அமையும் சாத்தியம் அதிகம் உண்டு. 
இதைவிட தமிழர் கூட்டமைப்போடு தேசிய அரசாங்கம் என்றில்லாமல் ஐ.தே.முன்னணி ஒரு கூட்டாட்சியை ஜனாதிபதி மைத்திரியின் துணையோடு நடத்தவும், அந்தக் கூட்டாட்சியை எதிர்க்கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சி வழி நடத்தவும் முடியுமாக இருந்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கி வீறு நடைபோட முடியும். 
ஜனாதிபதி மைத்திரியின் நற்பெயர் இலங்கை இதிகாசத்தில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட்டு சாகாவரம் பெறப்போவதை அமைக்கப்படப்போகும் பாராளுமன்ற ஆட்சிதான் தீர்மானிக்கப் போகிறது என்பதை ஜனாதிபதி உதா சீனம் செய்வதற்கில்லை. 
நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்தவின் பாலருந்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொட்டிலில் இனவாதிகளின் தாலாட்டில் ஆடிக்கொண்டிருந்த சுதந்திரக்கட்சி ஞானஸ்ஞானம் செய்த ஐ.தே.முன்னணி ஆட்சியில் அங்கம் வகிக்கவுள்ளமை ஆட்சிக்கு ஆப்படிக்க அனுப்புவதாகவே மக்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள். 
இந்த இழுபறி இன்னும் தொடருமானால், அறுதிப் பெரும்பான்மை அளிக்கும்படி மக்களிடம் வேண்டிக் கொண்டு பாராளுமன்றத்தைக் கலைப்பது பற்றிப் பிரதமர் ரணில் யோசித்தால் அது தவறாக முடியாது. 
இந்த நிலைமையை நீடிக்க விடாமல் எதிர்க்கட்சித் தலைமையை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகள் பிரதமரையும், ஜனாதிபதியையும் காரணங்களை விளக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். 
அவர்கள் அதற்கு இணங்காத பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறி சிறுபான்மை கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |