சுற்றிவளைப்பிலிருந்து தப்பிப்பதற்காக பொலிசாரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பிரபல ரௌடி ஒருவனை பருத்தித்துறை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். கொலைக்குற்றச்சாட்டில் இந்த ரௌடி தேடப்பட்டு வந்தான். சிலகாலமாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் வடமராட்சி அல்வாய் வடக்கில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி குடும்பஸ்தர் ஒருவரை கல்லால் அடித்து கொன்றதாக சகோதரர்கள் மூவர் இனம்காணப்பட்டு தேடப்பட்டனர். இருவர் எற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகினான். மு.சதீஸ்குமார் (28) என்ற ரௌடி நேற்று அல்வாயில் வீடு ஒன்றில் பதுங்கியிருக்கும் தகவல் பொலிசாருக்கு கிடைத்தது.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிசார், அங்கு சென்றனர். பொலிசாரைக்கண்டதும் ரௌடி தப்பியோட முயன்றான். எனினும், பொலிசார் வீட்டை சுற்றிவளைத்து விட்டனர். இதனையடுத்து தன்னிடமிருந்த பயங்கரவாளால் பொலிசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றான். கடைசிவழியாக ரௌடியின் காலின் கீழ் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி கைது செய்தனர்.
தற்பொழுது ரௌடி பொலிஸ் காவலில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
0 Comments