Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எமது தந்தை ஒரு திருடன்: கூறும் மகன் நாமல்

முன்னாள் ஜனாதிபதியான தனது தந்தை மக்களின் இதயத்தை மாத்திரமே திருடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பதுளையில் உள்ள விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது தந்தை கொள்ளையிட்டதை மெதமுலனவில் பார்த்தோம். தந்தை மக்களின் இதயத்தையே கொள்ளையிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மெதமுலனவுக்கு வந்தனர். அப்போது எமது தந்தை கொள்ளையிட்ட இதயங்களை கண்டோம்.
எமக்கு முன்னால் பாரிய சவால் உள்ளது. நாட்டின் ஐக்கியத்தை இல்லாமல் செய்து நாட்டை அழிக்கும் திட்டம் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
திருடர்களை பிடிக்க போவதாக நல்லாட்சியாளர்கள் கூறினர். எமது தோட்டங்களுக்குள் புகுந்து லம்போகினி, விமானங்களை தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மெதமுலனவில் நேற்று நடத்திய விசேட கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்பாட்டாளர்கள் 100 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனினும், நேற்று மெதமுலனவிற்கு அண்மையில் கலைக்கப்பட்ட ஆறாம் நாடாளுமன்றில் அங்கம் வகித்த 28 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
சபாநயாகர் சமால் ராஜபக்ச, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, ஆர்.துமிந்த சில்வா, மாலினி பொன்சேகா, பவித்ரா வன்னியாரச்சி, கமலா ரணதுங்க, டி.பீ.ஏக்கநாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ஹெலிய ரம்புக்வெல்ல, சந்திரம வீரக்கொடி, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, நிசாந்த முத்துஹெட்டிகம, திஸ்ஸ கரலியத்த, மனுஷ நாணயக்கார, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, சரண குணவர்தன, காமினி லொக்குகே, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, பியசிறி விஜேநாயக்க, அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மெதமுலன கூட்டம் மகிந்தவுக்கு ஏமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் இன்று மெதமுலனவுக்கு சென்ற அரசியல்வாதிகள் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எவரும் இடம்பெறவில்லை.
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். 
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் மகிந்தவுடனான இன்றைய சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என ராஜபக்ச ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
எனினும் அவர்களில் எவரும் கலந்து கொள்ளாதது ராஜபக்ச மற்றும் அவரது குழுவினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெதமுலன கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் 100க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.
மெதமுலனவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை இந்த கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ச, தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிக்கவில்லை.
அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியை தழுவிய பின்னர், தனக்கு ஆதரவு வழங்கிய விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில மற்றும் கடந்த ஆறு மாதங்களாக தனக்கு ஆதரவான பிரசாரங்களை முன்னெடுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை மாத்திரமே மகிந்த குறிப்பிட்டு பேசினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கட்சிகளுடன் தனித்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவது தொடர்பான சமிக்ஞை மகிந்த ராஜபக்சவின் பேச்சில் வெளிப்பட்டதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments