இன்று கிழக்கில் கண்ணகிக்கு கலை இலக்கிய விழா நடைபெற்று வருகின்றது. தமிழக தேசத்தில் கோவலனை பறிகொடுத்த கண்ணகியின் கோபம் மதுரையை எரித்து சாம்பலாக்கியது வரலாறு.
கண்ணகியின் கோபம் தனிந்த இடம் இலங்கையின் கிழக்கு மாகாணமெனச் சொல்லப்படுகின்றது. கண்ணகியின் கோபம் தனித்த தேசம் எங்கள் தேசம். கண்ணகிக்கு கோயில் கட்டி நீதிக்கும், கற்புக்கும் தலைவணங்கிய தேசம் எங்கள் தேசம் உண்மையும், அறமும் உயர்வென்று வாழ்ந்த எமது பூமியில் இன்று பல ஆயிரம் கண்ணகிகள் நீதி கேட்டு நிர்கதியாகி நிற்கின்றனர்.
இலக்கியங்கள், புராணங்கள், வரலாற்று நிகழ்வுகள், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் ஒழுக்கம் நிறைந்த ஆன்மீக தேசமாக மிளிர்ந்த எமது பூமி இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம் என மிகவும் ஒழுக்கமற்ற மக்களாக நீதிகளை தொலைத்து விட்டு தேடுகின்ற தேசமாக எம் தேசம் மாறியுள்ளது.
அநீதியின் வரலாறு தொடர்கிறது. அன்று தமிழக தேசத்தில் கோவலனை பறிகொடுத்த வரலாற்று நங்கை வந்தமர்ந்த தேசத்தில் இன்று கோவலர்களை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான கண்ணகிகள் நீதி கேட்டு கண்ணீர் சிந்தி நிற்கின்றனர்.
வரலாற்றை படித்துத் துடித்த மானிட உள்ளங்கள் இன்று நிகழ்காலத்தை கண்முன் பார்த்தும் துடிக்காது இருப்பது வேதனையே.
கிழக்கு பல்கலைகழகத்தில் தங்களது 138 கோவலர்களை பறிகொடுத்த கண்ணகிகளுக்கு இருபது வருடமாக நீதி வழங்கப்படவில்லை, சத்துருக்கொண்டானில் 184 கோவலர்களை பறிகொடுத்த கண்ணகிகளுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை, கொக்கட்டிச்சோலையில் 135 கோவலர்களை பறிகொடுத்த கண்ணகிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அதுமட்டுமா கிழக்கே மகிழடித்தீவு, வாகரை தோணிதாட்டமடு, புல்லுமலை, சித்தாண்டி, புனாணை, பெண்டுகல்சேனை, உடும்பன்குளம், அட்டப்பள்ளம், வீரமுனை என எத்தiயோ ஆயிரம் கோவலர்களை இழந்த கண்ணகிகள் இன்றும் நீதி கிடைக்காது வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
அதேபோன்று 2009 ஆண்டு இறுதி யுத்தத்தில் தனது கோவலர்களை சிங்கள தேசத்திடம் கொடுத்த எத்தனையோ கண்ணகிகள் தொடர்ந்தும் வழக்காடு மன்றங்களிலும், அரசின் வாயில்களிலும் நீதி கேட்டு காத்துக்கிடக்கின்றனர்.
வடகிழக்கு தேசத்தில் இன்று 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்ணகிகள் நீதி கேட்டுக் காத்துக்கிடக்கின்றனர். இவர்களுக்கு நீதி வழங்க மறுக்கும் இலங்கை தேசம் நிச்சயம் ஒருநாள் எரியும்.
அதுமட்டுமா அன்று அங்கு கோவலன் மட்டுமே கொலைசெய்யப்பட்டான் ஆனால் இங்கு வந்த சிங்களதேசம் எமது கண்ணகிகளையெல்லாம் துயில் உரித்ததுடன். கோவலர்களையெல்லம் கொன்றொழித்தனர்.
நீதி மறுக்கப்பட்ட தேசத்தின் அடிமைகளாக எத்தனையோ இலச்சம் விதவைகள் இன்றைய கண்ணகிகளாக எமது தாயக மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
வார்த்தைகளை மௌனமாக்கி, வாழ்க்கையை தொலைத்தவர்களாக வைராக்கியத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களின் வெஞ்சம் நிச்சயம் ஒருநாள் இலங்கை தேசத்தை எரிக்கும்.
கோவலனுக்காக மதுரையை எரித்த தாய் நிச்சயம் எங்கள் கண்ணகிகளுக்காக இலங்கையை எரிப்பாள்.
எனவே அதில் இருந்து தப்பவேண்டுமென்றால் இனியாவது நீதி வழங்குங்கள் சிங்கள தேசம் தமிழர் பகுதியில் ஆடிய கொலைவெறி ஆட்டத்திற்கு நீதி வழங்குங்கள்.
சந்தர்ப்பமும், சாட்சிகளும் இன்று வேண்டுமானால் இலங்கையை காப்பாற்றலாம் சத்தியமும், உண்மையும் என்றோ ஒருநாள் இதற்காண தண்டனையை வழங்கியே ஆகும்.
தமிழர் தேசத்தின் கற்புக்கரசிகளாக தினம் தினம் தனது கணவனை நினைத்து அழும் கண்ணகிகளின் கண்ணீர் நிச்சயம் ஒருநாள் இலங்கையை எரிக்கும்.
எனவே இனியாவது நீதி வழங்குங்கள் உலகமே இனியாவது நீதி வழங்கு இலங்கை தேசமே இனியாவது நீதி வழங்கு, உண்மை தெரிந்தும் ஊமையாய் இருக்கும் உலகமே இனியாவது நீதி வழங்கு இல்லையேல் நீயும் ஒருநாள் நிச்சயம் எரிந்துபோவாய்…….!
-தீரன்-






0 Comments