Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காலத்திற்கு ஏற்றவகையில் கல்வி அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்: யோகேஸ்வரன்

கல்வி அதிகாரிகள் காலத்தின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு பிரதேச கல்வி முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இடம்பெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது என்றும் அவர் கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி உதயன் மூலை விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும் பேது தமிழ் சமூகம் கல்வித் துறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பின்னோக்கியே காணப்படுகிறது.ஏன் எங்களால் முன்னேற்றமடைய முடியாது என்று இனிவரும் காலங்களில் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுத்திருந்தார்கள்.
நாங்கள் இது தொடர்பாக கேட்ட போது கிழக்கு மாகாணத்திலிருந்த இராணுவ அதிகாரியான ஆளுநரின் உத்தரவு என கூறினார்கள்.
ஜனவரி 8ம் திகதியுடன் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என நினைத்தோம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில கல்வி வலயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஆனால் நாங்கள் இன்னமும் கடந்த அரசாங்கத்திலிருந்தவர்களுக்கே விசுவாசமாகவிருப்போம் என சில கல்வி அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களை நாங்கள் மாற்றுவதற்குரிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
நாங்கள் பட்டிருப்பு, மட்டக்களப்பு, மேற்கு வலயங்களிலுள்ள பல பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிதிகளாகக் கலந்து கொண்டிருக்கிறோம்.
கல்குடா கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளின் நிகழ்வுகளுக்குச் சென்றுள்ளோம். யார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என நடவடிக்கையெடுத்தார்களோ அவர்களுக்கு பதிலாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தண்டாயுதபாணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச அரசியல்வாதிகளின் விசுவாசிகளாக செயற்பட்ட கல்வி அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை.
அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி பல வருட காலமாக தொடர்ந்தும் ஒரே பாடசாலையில் கடமையாற்றுகிறார்கள்.
ஆனால் சில பெண் ஆசிரியர்கள் தொடந்தும் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றுகிறார்கள்.இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.பாடசாலைகளின் ஆசிரியர் வளப்பங்கீடு தொடர்பில் எல்லோருக்கும் சமநிலை பேணப்பட வேண்டும்.
கல்வி நிர்வாகச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments