Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உறங்கிக் கொண்டிருந்த வேளையில் குடிசைக்கு தீவைப்பு;ஏறாவூரில் பரபரப்பு


இன்று அதிகாலை, மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் ரூபி கிராமத்தில் குடிசையொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இந்த தீவைப்பு இடம்பெற்றதாக அந்தக் குடிசையில் வசித்து வந்த அதன் உரிமையாளர் முஹம்மத் ஹஸன் பாத்தும்மா (வயது 53), பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதோடு வீட்டுப் பாவனைப் பொருட்கள், உடமைகள் மற்றும் தொழில் உபகரணங்கள் என்பனவும் எரிந்துள்ளதாக வீட்டார்கள் தெரிவித்தனர்.

இக் குடிசைக்குத் தீ வைக்கும் வேளையில் தாயும் மகளுமாக இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் இருவர் குடிசைக்கு தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தனது காணியை அடாத்தாகக் கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு நபராலேயேதான் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ஏற்கனவே இரு தடவைகள் தனது குடிசை சேதப்படுத்தப்பட்டதாகவும் தனது வளவில் பயிரிடப்பட்டிருந்த பயன்தரும் பயிர்கள் அவ்வப்போது அழிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்ட தாயான பாத்தும்மா ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments