Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவின் பிரசார மேடையில் மோதிக்கொண்ட ஈபிடிபி - சுதந்திரக்கட்சி பிரமுகர்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஈபிடிபி முக்கியஸ்தர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி மேடைக்கு வருவதற்கு சற்று முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே முரண்பாடு ஏற்பட்டது.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஈ.பி.டி.பி கட்சியினரே மேற்கொண்டிருந்தனர். கிராமங்கள் தோறும் கூட்டங்கள் கூடி மக்களைப் பேருந்துகளில் ஏற்றி வந்ததும் ஈ.பி.டி.பியினரே. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மைதானத்தில் மக்கள் அமர்த்தப்பட்டிருந்த வேளை ஜனாதிபதி வருவதற்குச் சற்று முன்னர் அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் நீலப்படையணி என்று எழுதப்பட்டு மகிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 'ரீசேட்டை' விநியோகிக்கும் பணியை அங்கு ஆரம்பித்தனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் முண்டியடித்து 'ரீசேட்டை'ப் பெற்று அணியத் தொடங்கினர். இதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என அங்கஜன் இராமநாதனுக்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதனைப் பொருட்படுத்தாது அங்கஜன் சிரித்தவாறு தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். தொடர்ந்தும் 'ரீசேட்' விநியோகம் நடைபெற்றது. ஆத்திரமடைந்த சந்திரகுமார் மீண்டும் அங்கஜனை எச்சரித்தார். அதில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தா ஆகியோரும் அங்கஜனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத அங்கஜனும் அவர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதன்போது நீங்கள் செய்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்று இரு தரப்பினரும் மாறி மாறிக் கூறிக்கொண்டனர். தேர்தல் பரப்புரை மேடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அதேவேளை மறு பக்கத்தில் இரு தரப்பினர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டது. இதன்போது அங்கஜனின் ஆதரவாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் மீது தாக்கியதாக கூறப்படுகின்றது. அதனையடுத்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் பரப்புரை மேடைக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா சுசில் பிரேமஜந்தவுக்கு தகவலை தெரிவித்தார். அதனையடுத்து சுசில் பிரேம ஜயந்த முறுகலை முடிவுக்குக் கொண்டு வந்தார். மக்களை யார் அதிகளவில் அழைத்து வந்தது, யாருடைய ஆதரவாளர்கள் அதிகம் வந்தார்கள் என்பதன் போட்டியே இந்த மோதலுக்குக் காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments