Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

”தம்பி, அமைதியாக உறங்கு. நானும் ஒரு நாள் உன்னைத் தேடி வருவேன் ” பிலிப் யூக்ஸ் இறுதி சடங்கில் உருக்கம்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் 26 வயதான பிலிப் யூக்ஸ் சிட்னியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, எகிறி வந்த பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் கடந்த 27-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நிலைகுலைந்து போய் விட்டனர்.
இந்த நிலையில் 6 நாட்கள் கழித்து பிலிப் யூக்சின் உடல் இன்று புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி யூக்சின் சொந்த ஊரான வடக்கு நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடங்கிய மாக்ஸ்வில்லே நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி தொடங்கியது.
யூக்சின் மறைவால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஒரு வார காலமாக கிரிக்கெட் மட்டையை தொடவே இல்லை. தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அனைத்து வீரர்களும் யூக்சின் இறுதிச்சடங்கு பிரார்த்தனையில் பங்கேற்றார்கள்.
 ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், ரிக்கிபாண்டிங், மேத்யூ ஹைடன், மெக்ராத், ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே, மைக் ஹஸ்சி உள்ளிட்ட ஏராளமான முன்னாள் வீரர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


சுமார் 3 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய கடற்கரை நகரமான மாக்ஸ்வில்லேவில் சில தினங்களாக துக்கம் குடிகொண்டுள்ளது. அனுதாபத்தின் வெளிப்பாடாக அங்கு பல்வேறு இடங்களில் யூக்சின் உருவப் படங்களும், பூச்செண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இன்று வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் விளையாட்டு அரங்கில் தான் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளியின் வளாகத்தில் மக்கள் கூடுவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன வளாகத்தில் இருந்தபடி இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அங்கு மெகா திரையும் வைக்கப்பட்டிருந்தது.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், யூக்சை தனது உடன்பிறவா சகோதரர் போன்று பாவித்தார். அவரது திடீர் மரணம் இவரை கடுமையாக உலுக்கி விட்டது. பேட்டி கொடுத்த போது துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

யூக்சின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளையும் அவரே முன்னின்று கவனித்தார். குடும்பத்தினரின் விருப்பப்படி யூக்சின் உடல் வைக்கப்படும் பெட்டியை ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், முன்னாள் சக வீரர் டாம் ஹூபர் ஆகியோர் தூக்கி வந்தனர்.. இவர்களுடன் யூக்சின் தந்தை கிரேக், சகோதரர் ஜாசன், உள்ளூர் பிரமுகர்கள் கோரி அயர்லாண்ட், மிட்செல் லோனர்ஹன், மேத்யூ டே ஆகியோரும் சவப்பெட்டியை சுமந்தனர்.


இறுதிச் சடங்கின் போது கிளார்க் கண்ணீர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். அவரால் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது.

இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச் சடங்கின்போது கிளார்க குரல் தழுதழுக்க இரங்கல் குறிப்பை வாசித்தார். அதிலிருந்து... நீ எங்கே போனாய் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு இடத்திலிருந்து நீயும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாய். மீண்டும் அவன் என்னுடன் பேசுவானா என்று இப்போதும் கூட நான் ஆவலாக உள்ளேன். அவனது முகத்தை மீண்டும் காண ஆசைப்படுகிறேன். மைதானத்தில் அவனை மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.

அவனது ஆன்மா எங்கும் போகவில்லை. என்னுடனேயே இருக்கிறது. அது என்னை விட்டுப் போகாது என்றே நான் நம்புகிறேன். சிட்னி மைதானத்தின் புல்வெளிப் பரப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு நான் நடந்தேன். அந்த புல்வெளியில் நானும் ஹியூக்ஸும் செலவிட்ட நேரங்கள் என்னை அலைக்கழித்தன. அவனது கனவுகள் அந்த புல்வெளியோடு போய் விட்டன. அந்த மைதானத்தில்தான் அவன் ரசிகர்களைக் கவர்ந்தான். அந்த மைதானத்தின் எல்லைகதளைத் தாண்டித்தான் அவன் பவுண்டரிகளை விளாசினான்.

அந்த மைதானத்தில்தான் அவன் கடைசியாகவும் வீழ்ந்தான். அருமையான இந்த விளையாட்டுக்காக கடைசி வரை துடித்த இதயம் அவனுடையது. அவனது வாழ்க்கையில் எல்லாமே கிரிக்கெட்தான். அவனது ஆத்மா கிரிக்கெட்டை அந்த அளவுக்கு நேசித்தது. அவன் ஏற்படுத்தி வைத்துள்ள அந்த அடையாளத்தை சிட்னி மைதானம் என்றுமே மறக்காது. நானும் மறக்க மாட்டேன். நாம் அவனை என்றுமே நினைவு கூர்வோம். தம்பி, அமைதியாக உறங்கு. நானும் ஒரு நாள் உன்னைத் தேடி வருவேன் என்று பேசினார் கிளார்க். பேச்சின்போதும், பேச்சின் இறுதியிலும் கிளார்க்கால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Post a Comment

0 Comments