ஈராக்கில் உள்ள இஸ்லாமிய தேச ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த சில வாரங்களாக அமெரிக்கப் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலியாகியுள்ளனர் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. வாஷிங்டனில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவித்தள்ளதாவது... கடந்த நவம்பர் மாதம் முதல், இராக்கில் ஐ.எஸ். தலைமை மீது குறி வைத்து நிகழ்த்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஏராளமான மூத்த தலைவர்கள், இடைநிலை கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். |
ஐ.எஸ்.ஸின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாதக் குழுவைக் கட்டுப்படுத்துவது, வழிநடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இராக் ராணுவம், குர்து படையினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் தொய்வடையும். அமெரிக்கக் கூட்டுப் படையினருக்கு கிடைக்கும் தகவல்கள், இலக்குகள், நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை என்றபோதிலும், எதிரியின் தலைமை, கட்டுப்பாட்டு அமைப்பு, ஆயுதம் உள்ளிட்ட வசதிகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்குவது நமது திட்டங்களில் ஒன்று என்பதை மட்டும் குறிப்பிட முடியும். அதன்படி, அமெரிக்கா தலைமையிலான 40 நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இராக்கில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் மீட்பதற்கு, அமெரிக்க கூட்டுப் படையினர் நிகழ்த்திய வெற்றிகரமான தாக்குதல்கள் உதவும் என்று ஜான் கிர்பி கூறினார். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய வேகத்துடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
0 Comments