பொது எதிரணியின் காய்நகர்த்தலால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிரணியினர் தொடர்ச்சியாக மந்திராலோசனை செய்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிககா குமாரதுங்க தலைமையிலான குழுவினரே இந்த மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசாங்கத்துக்கும் எதிரணிக்கும் இன்று தீர்க்கமான நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
|
2010ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி 144 உறுப்பினர்களுடன் ஆட்சியமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, செப்டெம்பர் 8ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 18ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. 2011 நவம்பர் 31ஆம் திகதி, ஆளும் கட்சி 161 உறுப்பினர்களையும் எதிரணி 64 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன. கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, அரசாங்கத்திலிருந்து விலகி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கடந்த வியாழக்கிழமை இணைந்து கொண்டார்.
முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதியமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க,எம்.கே.டி.எஸ் குணவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் விஜயசிங்க அரசாங்கத்திலிருந்து விலகி சுயேட்சையாக இயங்கப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதேவேளை, அரசாங்கத்துக்கு மாறிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை, மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், பெரும்பாலும் இன்று இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆளும் கட்சியிலிருந்து 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிரணிக்கும் எதிரணியிலிருந்து சில முக்கியஸ்தர்கள் ஆளும் தரப்புக்கும் மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் கொழும்பு அரசியல் சூடுபிடித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல ஆளும் தரப்பிலிருந்து எதிரணிக்கு, 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கட்சி மாறினால், அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்து அரசாங்கம் கவிழ்ந்து விடும்.
நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கின்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தக்கவைத்து கொள்வதற்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிரணியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மந்திராலோசனை செய்தன. இந்நிலையிலேயே வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கின்றது. அதற்கு முன்னர், கொழும்பு அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலவேளைகளில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்துவிடும் நிலை உள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடலாம். அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வரவு செலவுத் திட்ட கடைசி நாளில் பலர் தம்பக்கம் வருவர் என்று தெரிவித்திருந்தார்.
1960ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க, பதவி விலகி நாடாளுமன்றத்தை கலைத்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இறுதிவரை சபையில் இருக்கவேண்டும் என்று அரசாங்கக்கட்சி பிரதம அமைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
|
0 Comments