இந்துக்கள் மத்தியில் புரட்டாதி மாதம் பல முக்கிய வழிபாடுகளை கொண்ட மாதமாக மிளிர்கின்றன. அதாவது இம் மாதம் மூர்த்தி வழிபாடு, கிரக வழிபாடு மற்றும் பிதிர் வழிபாடுகள் கொண்ட சிறந்த மாதமாகும். இதன்படி புரட்டாதிச் சனி, நவராத்திரி. கேதார கெளரி விரதம், மஹாளயம் என்பன இவ்புரட்டாதி மாதத்தில் முக்கிய வழிபாடுகளாக அமைந்து ள்ளன.
இதில் சனி பகவானின் தோசத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இவ் புரட்டாதிச் சனி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, சனியைப் போல கெடுப்பவனும் இல்லை, என்பது முதுமொழி. இதனால் இந்து மக்கள் சனி பகவானின் அகோரப் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே சனி பகவானை நோக்கி வழிபாடுகளையும் விரதங்களையும் நோற்று வருகின்றனர்.
இவ்விரதத்தினை நோற்கும்போது சில நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் காலையில் நல் எண்ணை தலை முதல் உடல் முழுவதும் தேய்த்து அரப்பு எலுமிச்சம் பழம் என்பன வைத்து நன்கு முழுக வேண்டும். பின்பு கோவிலுக்குச் சென்று சனீஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணை விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்தல் வேண்டும். அத்துடன் கறுப்பு நிறத்துணியையும், நீல நிற பூமாலையும் சனீஸ்வரனுக்கு சாத்தி கருங்குவளைப்பூ, நீல நிறப்பூ, வன்னி இலை என்பனவற்றால் அர்ச்சனை செய்து தமக்கு உள்ள சனித் தோசத்தைப் போக்கி நமக்கு நல்வாழ்வு கொடுக்கும்படி சனீஸ்வரனை வேண்டுதல் வேண்டும்.
இதன்போது எள்ளுக் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து அதனை காகத்துக்கு உணவாக கொடுக்க வேண்டும். இதன் பின்னர் சிவன், விஷ்ணு முதலான தமது குல தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடுகளை செய்தல் வேண்டும்.
இவ் புரட்டாதி சனி விரதம் இன்று 20ம் திகதி முதலாம் சனி விரதம் ஆரம்பமாகி தொடர்ந்து 27ம் திகதி இரண்டாம் விரதம் அடுத்த 10ம் மாதம் 4ம் திகதி மூன்றாவது விரதம் இறுதி சனி விரதம் 11ம் திகதியுடன் புரட்டாதி சனி விரதம் நிறைவடையும்.


0 Comments