மன்னார் எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலை மீட்கப்பட்டுள்ளது.
எழுத்தூர் செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தர்மசீலன் கரிகரன் (வயது-33) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் பேரூந்து சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
இன்றைய (25) தினம் காலை வழமை போல் கடமைக்குச் செல்லும் நோக்கில் சென்ற நிலையிலே குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செல்வ நகர் கிராமத்தில் பின் பகுதியில் ஆள் நடமாட்டமுள்ள காட்டுப்பகுதியில் உள்ள வியாயை என்ற மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் முழந்தாலில் இருந்த வகையிலே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக குறித்த குடும்பஸ்தருக்கும்,அவருடைய மனைவிக்கும் இடையில் வீட்டில் சண்டை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் தனது மகன் தற்கொலை செய்யவில்லை எனவும்,தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பஸ்தரின் தாயார் தெரிவித்துள்ளனார்.
இந்த நிலையில் இன்று (25) மதியம் 12.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பதில் நீதவான் எம்.சதக்கத்துள்ளா சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதே வேளை குறித்த குடும்பஸ்தர் அணிந்திருந்த காட்சட்டை பையினுள் காணப்பட்ட இரண்டு கையடக்கத்தொலைபேசிகளையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ள நிலையில் குறித்த இரண்டு கையடக்கத்தொலைபேசிகளிலும் இறுதியாக ஏற்படுத்தப்பட்ட அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு பதில் நீதவான் எம்.சதக்கத்துள்ளா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments