Home » » பெண்ணைக் காதலிப்பதனை நிறுத்திவிட்டு மண்ணைக் காதலியுங்கள். அரியநேந்திரன்

பெண்ணைக் காதலிப்பதனை நிறுத்திவிட்டு மண்ணைக் காதலியுங்கள். அரியநேந்திரன்

பெண்ணைக் காதலிப்பதனை நிறுத்திவிட்டு மண்ணைக் காதலியுங்கள் அப்போது தற்கொலைகளுக்கு பதில் கிடைத்து விடும் அதன்மூலம் எமக்கு எம்மினத்தின் மீது பற்றுறுதி ஏற்படும்.
65 வருடங்களாக எம்மினம் பட்ட துன்பதுயரங்களை ஒருகணம் எண்ணிப்பார்த்தால் நாம் யாருமே தற்கொலைக்கு துணிய மாட்டோம் மாறாக மண்ணைக் காப்பாற்றுவதற்கு உழைப்போம் இன்று எமது தாயக பூர்வீக நிலங்கள் வேற்று இனத்தவர்களினால் நாளுக்கு நாள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது இதனைத் தடுக்க ஒரு கட்சியினால் மாத்திரம் முடியாது இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகும்  என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட தெவிலாமுனை ஸ்ரீ நரசிங்க வைரவராலய வருடாந்த உற்சவத் திருநாளன்று முனைக்காடு நாகசக்தி கலைக்கழக தலைவர் மு.நமசிவாயம் தலைமையில் கலையரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்
இலங்கை அரசாங்கம் சமாதானம் என்று கூறும் 5 வருட காலகட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தளவில் கலாசார சீரழிவுகள், மாணவர் தற்கொலை அதிகரிப்பு, மதுபானசாலைகளின் அதிகரிப்பு ஆகியவையே அதிகரித்துள்ளது.,

ஆலயங்களில் கலைகலாசார நிகழ்வுகள் வைப்பதன் நோக்கம் தமிழர்களின் கலைகலாசாரங்கள் என்றும் உயிர்த்துடிப்புள்ளதாக அமைய வேண்டும் அதன்மூலம் எதிர்காலச் சந்ததியினர் நன்மையடைய வேண்டும் என்பதை சிரத்தை எடுத்து அன்றிலிருந்து இன்று வரைக்கும் நாட்டுக்கூத்து தொடக்கம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வரும் ஒரு கலைக்கழகமாக செயற்படுவது மிகவும் பாராட்டிற்குரிய தொன்றாகும்.
ஆனால் இன்று சமாதானம் என்று கூறி தமிழர்களுடைய கலாச்சாரத்தினை மலினப்படுத்தி அதற்கு மாறான செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
அதனொரு பகுதி தான் மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு மதுபான சாலைகளின் புதிய பரிணாமம் என்று சொல்லலாம் இம் மாவட்டத்தை மாத்திரம் எடுத்து நோக்கினால் அரசாங்க அதிபர் கூறியபடி மாதம் ஒன்றிற்கு 200 மில்லியன் ரூபா மதுபானத்திற்காக செலவிடப்படுகின்றது. அதே போன்று மன்முணை மாதர் அமைப்பின் கணக்குப்படி ஒரு மாதத்திற்கு 41 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.
படுவாங்கரை பிரதேசத்தினை எடுத்து நோக்கும் போது ஐந்து வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மதுபான சாலைகள் கூட இருந்ததில்லை ஆனால் அரசாங்கம் கூறும் சமாதான காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் புதிதாக திறக்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தினை சீரழித்து வருகின்றது இதுதான் அரசாங்கம் செய்த மிகப்பெரிய சேவையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் ஏனைய மாவட்டங்களை விட வறுமை நிலை கூடிய மாவட்டமாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பாக இலங்கையின் வறுமை நிலை இன்று 8.5 வீதமாகும் ஆனால் 25 மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால் மட்டக்களப்பு மாவட்டமே 21.6 வீதமான வறுமைக் கோட்டினை காட்டி நிற்கின்றது.
இந்த மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வறுமைக்கும், மதுபான பாவனைக்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதனை யாவரும் அறிந்திருப்பது கட்டாயமானதாகும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியினை பெற வழிப்படுத்த வேண்டும் அப்போது தான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.  தற்போது மாணவர்கள் தற்கொலை செய்யும் வீதம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது இதற்கான காரணத்தினை தேடினால் காதல் விவகாரம் என தெரியவருகின்றது இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த சிரத்தை எடுக்கவேண்டும்.
எமது எதிர்காலச் சிந்தனைகள் எமது குடும்பம்,  உறவுகள் என்று இருப்பதற்கும் அப்பால் எமது நிலத்தின் மீதும் சிந்தனை இருத்தல் வேண்டும் அப்பேதுதான் தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து வாழமுடியும் எனவும் கூறினார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |