முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் குறிக்கோள்களையும் யாப்பையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.அப்துல் மஜீட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலிக்கு வியாழக்கிழமை (17) அனுப்பி வைத்தள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூகத்தின் மீது எவ்வித அக்கரையும் நலன்களையும் கருத்தில் கொள்ளாது தத்தமது பதவிகளையும் அமைச்சுக்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கட்சியின் தலைமைத்துவம் காலத்திற்கு காலம், நேரத்திற்கு நேரம் மாறுபட்ட கருத்துக்ளையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து மக்களையும் ஏனையவர்களையும் ஏமாற்றி வரும் விடயம் அதன் நம்பகத் தன்மையினையும் எதிர்கால நலன்களையும் கேள்விக் குறியாக மாற்றியுள்ளது.
குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக அண்மைக்காலமாக திட்டமிட்ட முறையில் கட்டவிழ்க்கப்பட்டு வரும் வன்செயல்களை நிறுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையினையும் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு ஒரே மேடையில் அசராங்கை எதிர்த்தும் ஆதரித்தும் வேறுபட்ட இரு கருத்துக்களை கூறிவரும் தலைமைத்துவத்தினால் முஸ்லிம்களுக்கு எந்த பலனும் கிட்டப் போவதில்லை.
மேலும் பொத்துவில் பிரதேசத்திற்கு ஒரு அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணமாக அப்பிரதேசம் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக பேரினவாத சக்திகளின் ஆதிக்கமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு சமூகமும் எமது பிரதேச மக்களும் நாளாந்தம் அனுபவித்து வரும் துன்பங்களை கண்டு கொள்ளாமல் உணர்ந்து கொள்ளாமல் தலைமைத்துவம் இருந்து கொண்டுவருவதனால் எவ்விதமான விமோசனமும் கிடைக்கப் போவதில்லை’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எம்.அப்துல் மஜீட், முன்னாள் பிரதி அமைச்சர் சேகுஇஸ்ஸதீன் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments