இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகளான நிலையிலும், தமிழர்கள் வாழ்வில் இன்னும் விடியல் பிறக்கவில்லை. அவர்கள் இன்னும் முள்வேலிக்குள் வாழ்கிற நிலைதான் உள்ளது. சிங்களர்களுடன் சம மதிப்பு, சம மரியாதை, சம அந்தஸ்துடன் கண்ணியமாக வாழ்கிற நிலை உருவாக வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல். பெரீசுடன் கலந்து கொண்டபோது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்பின்படி, சமரச நல்லிணக்க நடவடிக்கைகளை முழுமையாகவும், விரைவாகவும் அமல்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேயிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச்சென்றுவிடும் விவகாரம் குறித்தும் ராஜபக்சேயிடம் மோடி விவாதித்தார்.
இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல். பெரீஸ், அடுத்த வாரம் டெல்லி வருகிறார். அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இலங்கை தமிழர்களின் நல்வாழ்வு, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மத்தியில் புதிய அரசு பதவி ஏற்றபிறகு இதுவரை 175 தமிழக மீனவர்கள், இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழக மீனவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என பதில் அளித்தார்.
0 Comments