பஞ்சாபில் போதை மருந்துகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அம்மாநில அரசு போதைப்பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து தீவிர நடவடிக்கைகளில் களமிறங்கிய அம்மாநில காவல்துறையினர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த மாதம் கூட சர்வதேச தொடர்புகளுடன் செயல்பட்ட முக்கிய கும்பலை அவர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐவர் உள்பட எட்டு பேர் கொண்ட சர்வதேச கடத்தல் கும்பலை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சிவக்குமார், வெங்கடேஷ், பிரபு மற்றும் மணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆர்.வி. சண்முகம், டெல்லியை சேர்ந்த சச்சின் சர்தானா, மியான்மர் நாட்டை சேர்ந்த செர்ரி ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அரியானாவை சேர்ந்த தேவேந்தர் காந்த் ஷர்மா ஹிமாச்சல்லில் உள்ள கார்ஜெட் நகரில் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடமிருந்து 1.5 கோடி ரூபாய் பணம், 8.19 லட்சம் ப்சூடோபெட்ரீன் மாத்திரைகள் உள்பட 615 கிலோ ப்சூடோபெட்ரீன், 6.5 கிலோ நார்கோடிக் பவுடரும் மற்றும் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் தமிழ்நாட்டில் தளம் அமைத்து செயல்பட்டு வந்ததாக போலீஸ் ஐ.ஜி பரம்ஜித் சிங் கில் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
0 Comments