Home » » ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகள் விடுதலை கொச்சிக்கு தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்

ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகள் விடுதலை கொச்சிக்கு தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள்


ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தனி விமானம் மூலம் கொச்சிக்கு இன்று அழைத்து வரப்படுகிறார்கள்.
புதுடெல்லி
உள்நாட்டு போர் நடந்து வரும் ஈராக் கில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட இந்தி யர்கள் உள்ளனர்.

46 நர்சுகள் தவிப்பு



அங்கு முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தில் உள்ள மருத்துவமனையில் இந்திய நர்சுகள் 46 பேர் (இவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மோனிஷா மற்றும் கேரளாவை சேர்ந்தவர் கள்.) பணியாற்றி வந்தனர்.

மொசூல் நகரை முதலில் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், கடந்த 12-ந் தேதி திக்ரித் நகரைக் கைப்பற்றினர். அங்கு, இந்திய நர்சுகள் வேலை 

பார்த்து வந்த மருத்துவமனை, முழுமையாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழும், காவலின் கீழும் வந்தது. அந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் நர்சுகள் அடைத்து வைக்கப்பட்டனர்.



தீவிரவாதிகள் கடத்தினர்

இந்த நிலையில் திக்ரித்தை மீண்டும் தங்கள் வசப்படுத்துவதற்காக அரசு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு வந்தனர்.
இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் தூத்துக்குடியை சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட இந்திய நர்சுகள் 46 பேரையும் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் ஒரு பஸ்சில் ஏற்றினர். அவர்களை திக்ரித் நகரிலிருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு கடத்திச் சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், நர்சு களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.


உம்மன் சாண்டி நடவடிக்கை

கடத்தப்பட்ட நர்சுகளில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி உம்மன் சாண்டி டெல்லி விரைந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நர்சுகளை உடனடியாகவும், பத்திரமாகவும் மீட்டுக்கொண்டு வர தக்க 

நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



நர்சுகள் கடத்தப்பட்டதை உறுதி செய்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன், ஈராக் கில் போர் பிரதேசங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு தொடர்பாக நமது அரசு மட்டுமல்ல, ஈராக் உள்ளேயும், வெளியேயும் பலரும் வேலை செய்து வருவதாக கூறினார்.

நல்ல முறையில் நடத்தினர்

நர்சுகளை மொசூலுக்கு கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அங்கு அவர்களை ஒரு மருத்துவமனையில் உள்ள குடோன் போன்ற அரங்கில் அடைத்து வைத்தனர். அங்கு மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத போதும், தீவிரவாதிகள் அவர்களை நல்ல முறையில் நடத்துவதாக ஒரு நர்சு, தன் தாயார் ஷோபாவுடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.


இருப்பினும் அனைத்து நர்சுகளும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து பத்திரமாக விடுவிக்கப்பட்டு, நாடு வந்து சேர்வதற்காக பரவலாக பல தரப்பினரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

விடுதலை



சற்றும் எதிர்பாராத வகையில் தூத்துக்குடி மோனிஷா உள்ளிட்ட நர்சுகள் 46 பேரையும் தீவிரவாதிகள் நேற்று எந்தவொரு பாதிப்பும் இன்றி, விடுதலை செய்து விட்டனர்.

அவர்கள் திக்ரித் நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஈராக்கின் தன்னாட்சி பிரதேசமான குர்திஷ்தானின் தலைநகரான எர்பில் நகரின் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முதல்-மந்திரி தகவல்

இதை டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி உறுதி செய்தார். இது பற்றி அவர் கூறுகையில், “நர்சுகள் நாளை (இன்று) காலை கொச்சி வந்து சேருவார்கள். மத்திய அரசு, பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம், மாநில அரசு என அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தோம். இறுதியில், நர்சுகளை இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை அடைந்திருக்கிறோம்” என கூறினார்.
அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை நேற்றும் சந்தித்து பேசினார்.

மத்திய அரசு உறுதி



நர்சுகளை தீவிரவாதிகள் விடுதலை செய்து விட்டதை மத்திய அரசும் உறுதி செய்தது. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் நிருபர்களிடம் பேசுகையில், “தங்கள் விருப்பத்துக்கு மாறாக (திக்ரித்திலிருந்து) வெளியேற்றப்பட்ட நர்சுகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை உறுதி செய்கிறோம். அவர்கள் எர்பில் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். எந்த தீங்கும் நேரவில்லை” என கூறினார்.

மேலும், “நமது முயற்சிகள் உச்சக்கட்டம் அடைந்து, அனைத்து இந்தியர்களையும் நாடு கொண்டு வந்து சேர்க்கும் வரையில் நாங்கள் திருப்தி அடைய மாட்டோம்” எனவும் கூறினார்.

தனி விமானம் சென்றது

46 நர்சுகளுடன் இந்தியா வர தயார் நிலையில் உள்ள பிற இந்தியர்களையும் அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக (நீள வகை) விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எர்பில் நகருக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றது. நர்சுகளை பத்திரமாக அழைத்து வருவதற்கு உதவியாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரையும், இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.எப்.எஸ். அதிகாரி ஒருவரையும் கேரள அரசு அனுப்பி வைத்து உள்ளது.

இந்த விமானம் எர்பில் சென்று நர்சுகளை அழைத்துக்கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை கொச்சி வந்து சேருகிறது. அங்கு நர்சுகளின் 
குடும்பத்தினர், மறுஜென்மம் எடுத்து வரும் தங்கள் மகள்களை ஆனந்த கண்ணீருடன் வரவேற்கின்றனர். நர்சுகள் கடத்தல் விவகாரம் குறுகிய 
காலத்தில் முடிவுக்கு வந்திருப்பது அவர்கள் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |