Home » » ஈராக்கில் 46 இந்திய நர்சுகள் விடுதலை நாளை காலை கொச்சி வருகின்றனர்

ஈராக்கில் 46 இந்திய நர்சுகள் விடுதலை நாளை காலை கொச்சி வருகின்றனர்


ஈராக்கில் தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்பட்ட 46 நர்சுகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட நர்சுகள் நாளை கொச்சி வருகின்றனர். என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


சிக்கித் தவித்த நர்சுகள்
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி, உக்கிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

அந்த நாட்டின் 2-வது மிகப் பெரிய நகரமான மொசூல் நகரை கடந்த மாதம் 9-ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அடுத்த 2 நாளில்

அவர்கள் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சொந்த நகரமான திக்ரித்தையும் பிடித்தனர். இந்த நகரில் உள்ள மருத்துவமனையில் இந்திய நர்சுகள் 46 பேர் (இவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்.) பணியாற்றி வந்தனர். இவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.



இதில் சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை இந்திய தூதரகம் நாடியது. அவர்களும் திக்ரித்தில் இந்திய நர்சுகளை தொடர்பு கொண்டு
உதவிகள் செய்து வந்தனர். இருப்பினும் நர்சுகள், தாங்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று 15
நாட்களுக்கு முன்பு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.
மூர்க்கத் தனமாக சண்டை
கடந்த சில நாட்களாக திக்ரித் நகரை தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக அரசு படையினர் தீவிரம் காட்டத்தொடங்கினர். இரு தரப்பினரும் மூர்க்கத்தனமாக சண்டை போட்டு வருகின்றனர். இந்திய நர்சுகள் பணியாற்றி வந்த மருத்துவமனையின் அருகிலும் குண்டு வீச்சு நடந்து வருகிறது.
திக்ரித் நகருக்கும், பாக்தாத்துக்கும் இடையேயான 160 கி.மீ. சாலை முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் நர்சுகள் வெளியேற
முடியாத நிலை இருந்து வந்தது. மருத்துவமனையை சுற்றிலும் தீவிரவாதிகள் சூழ்ந்திருந்தனர். இதனால் நர்சுகளின் குடும்பத்தினர், தங்கள் மகளின்
கதி என்ன ஆனதோ என தெரியாமல் கண்ணீரில் தவித்து வந்தனர்.



நர்சு கண்ணீர்
இந்த நிலையில், திக்ரித் மருத்துவமனையை குண்டுவைத்து தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டு, இந்திய நர்சுகள் 46 பேரையும் மருத்துவமனையில்
இருந்து தாங்கள் பிடித்து வைத்துள்ள மொசூல் நகருக்கு துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியானது.



அதே நேரம் அவர்களை தீவிரவாதிகளுடன் போக வேண்டாம் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாகவும், ஒரு நர்சு, செய்தி சானல் ஒன்றுக்கு நேற்று தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் தெரிவித்தார். அப்போது அவர் தங்கள் நிலை குறித்து கண்ணீருடன் விளக்கினார்.



தீவிரவாதிகள் தங்களை திக்ரித்திலிருந்து கொண்டு சென்று விட்டால், இனி தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கும் முடியாமல் போகலாம் என அழுது கொண்டே கூறினார்.



கடத்தல்



அடுத்த சில மணி நேரத்தில் நர்சுகளை தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பஸ்களில் கடத்திச் சென்று விட்டனர். அவர்கள் திக்ரித் நகரிலிருந்து 225
கி.மீ. தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு கொண்டு சென்று விட்டதாக தெரிய வந்தது. இது இந்திய நர்சுகளின் குடும்பத்தினருக்கு வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சியது போல வேதனையை அளித்தது.



நர்சுகளை தீவிரவாதிகள் திக்ரித்திலிருந்து சாலை வழியாக கொண்டு சென்று விட்டனர் என்பதை டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் உறுதி செய்தார். 
விடுதலை
கடத்தி செல்லப்பட்ட இந்திய நர்சுகள் மொசூல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது தீவிரவாதிகள் விடுதலை செய்வதாக நர்சுகளிடம் தெரிவித்தனர். 



இந்த செய்தியை அங்கு சிக்கியிருந்த நர்சுகள் தங்களது பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். இதனையடுத்து இந்திய நர்சுகள் அனைவரும் ஏர்பில் நகருக்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சர்வதேச செம்பிறை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று அனைவரும் ஏர்பில் நகரில் தங்குகின்றனர். நர்சுகள் மாலை சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். விமானத்தில் மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரி உடன் இருப்பார் என்று அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.நர்சுகளின் ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் நாளை காலை அனைத்து நர்சுகளும் தனி விமானம் மூலம் கொச்சி வந்தடைவார்கள் என்றும் அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்திய நர்சுகள் விடுதலை செய்யப்பட்ட தகவல்கள் வெளியானதை அடுத்து இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |