Home » » முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து வடக்கு,கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து வடக்கு,கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம்

அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இலங்கையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது. நாடுதழுவிய அளவில் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. தலைநகர் கொழும்பிலும், வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மன்னார் நகரில் தமிழ் வர்த்தகர்களும் இந்தக் கடையடைப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், ஏனைய இடங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மட்டுமே பூட்டப்பட்டிருந்தன. மன்னாரில் சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாக இந்த கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதால் தொடர்ந்தும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை பொறுத்தவரை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுவதால் அந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பிரதேசங்களில் அமைதியான நிலை காணப்படுகின்றது. கூடுதலான காவல்துறையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கத்தின் தலைவர் கே. எம். எம். கலீல் ஹாஜியாரின் இல்லம் மீது நேற்று நள்ளிரவு அடையாளந் தெரியாத ஆட்களினால் கழிவு ஆயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அளுத்கம வன்முறைகளை கண்டித்து ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பிரதேசத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையால் இன்று மீண்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்காமல் வழமைபோல் கடைகளை திறப்பது என மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கம் நேற்றிரவு கூடி முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த தகவல் குறுஞ்செய்தி மூலம் ஏனைய வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் பொது பல சேனாவிற்கு எதிராகவும் கவன ஈர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது. இந்த பேரணி முடிவில் இடம் பெற்ற சம்பவமொன்றின் போது அங்கு இருந்த சிறப்பு அதிரடிப்படை அதிகாரியொருவரால் தான் தாக்கப்பட்டதாக பிரதேச உள்ளுராட்சி சபைத்தலைவரான எம்.ஏ. எம். அன்ஸில் கூறியுள்ளார். இன்று காலை 10 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதிப் பேரணியை நடத்தியபோது, அவ்விடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களை மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தினால் திட்டியதுடன் தாக்குவதற்கும் முற்சித்துள்ளனர்.
இதன்போது குறுக்கிட்டு அமைதிப் பேரணியின் நோக்கத்தை விசேட அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் விளக்கியபோது இதனை கருத்தில் கொள்ளாத விசேட அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டர் தவிசாளரை துவக்குப் பிடியினால் கடுமையாகத் தாக்கினார். தான் ஒரு தவிசாளர் என்று பலமுறை கூறியும், விசேட அதிரடிப்படையினர் எல்லோரும் சேர்ந்து தவிசாளர் அன்ஸிலை தாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வவுனியா, குருநாகல் உள்ளிட்ட நாட்டின் பலவேறு பகுதிகளிலும் இன்று முஸ்லிம் வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கு கொண்டனர். இதேவேளை, யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு அண்மையில் தற்காலிகமாக குடியமர்ந்து யாழ்ப்பாணத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிங்களக் குடும்பங்கள் சிலவற்றுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை, வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டது. இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர். இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியாவில் அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் விரும்பினால் கடைகளைப் பூட்டி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். பொது இடங்களில் கூடி குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். அத்துடன், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர் பணித்தார். இதனால் அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |