Home » » கவுணாவத்தை ஆலய மிருக பலிக்கு யோகேஸ்வரன் எம்பி கண்டனம்

கவுணாவத்தை ஆலய மிருக பலிக்கு யோகேஸ்வரன் எம்பி கண்டனம்


இந்து என்றால் ஹிம்சை செய்யாதவன். ஆனால் இன்று இந்து சமய ஆன்மீகத்தை வளர்க்க வேண்டிய இந்து ஆலயங்கள் ஒரு சில இந்து ஆன்மீகம் என்ற போர்வையில் இந்து சமயத்துக்கு முரணான வகையில் ஆடு, கோழிகளை ஆலயங்களில் பலியிடுவதை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 

யாழ்ப்பாணம் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் வருடாந்தம் ஆலய உற்சவத்தில் மிருக உயிர்பலி இடும் செயற்பாடு நடைபெற்று வருவதையிட்டு இச்செயற்பாட்டை இவ்வருடம் முதல் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ரீதியில் சிவமானிட மேம்பாட்டு நிறுவனமும், சைவ மகா சபையும், அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து ஆன்மீக உணர்வாளர்கள் பலரும் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டனர். சிலர் நீதிமன்றம் வரை சென்று தமது கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 

ஆனால் இலங்கை சட்டத்தில் பிரதேச சபைக்கான அதிகாரத்தில் மிருகவதை சார்பாக சில சரத்துக்கள் முன்வைக்கப்பட்டு பிரதேச சபை இதற்கான தீர்மானத்தை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்பிரதேச சபை இந்து ஆலயத்தில் மிருக பலி இடும் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளது. இது மிக வேதனையான சம்பவமும், கண்டிக்கப்பட வேண்டிய விடயமும் ஆகும். 

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகப் பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புக்கள் மேற்கொள்ளும் சாத்வீக போராட்டங்களில் அடியேனும் கலந்து கொள்ள தீர்மானித்து இருந்தேன். இவ்வேளை வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதன் பிரதம பூசகராக அடியேன் உள்ளதால் இங்கிருந்து இந்நிகழ்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

ஆனால் இது சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் இந்து அமைப்புக்களுடன் தொடர்பாக இருந்தேன். இவ் அமைப்புக்கள் இந்து, சைவ மக்களை உண்மையான ஆன்மீக ரீதியில் செயற்பட அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தில் மிருகப்பலியிடுதல் சார்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியான செய்தி கிடைத்ததும் இவ் இந்து அமைப்புக்கள் என்னிடம் தொடர்பு கொண்டன. 

ஆலயங்களில் உயிர்பலியிடுதலை தடுக்கும் முகமாக இதற்கு அனுமதி அளிப்பதை தடுப்பதற்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவரை தொடர்பு கொண்டேன். அவர் வைத்தியசாலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின் வட மாகாண முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனது, பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராஜா ஐயாவுடன் தொடர்பு கொண்டு மிருகப் பலியை ஆலயங்களில் மேற்கொள்ளல் இந்து ஆன்மீகத்துக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் கூறி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உள்ளதால் இது சார்பான ஆலோசனையை தெரிவித்து இந்து ஆலயத்தில் மிருகப் பலி இடுதலை தடுத்து நிறுத்துங்கள் என வேண்டிக் கொண்டேன். இதற்கு தான் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதாக எனக்கு கூறினார். 

ஆனால் குறித்த ஆலயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் உள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை உயிர்பலி இடுவற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதை இட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அபிமான குடும்பத்தை சேர்ந்தவர் என்ற ரீதியிலும், அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், இந்து ஆன்மீகத்தை வாழ்க்கையில் இயன்றவரை கடைப்பிடித்து வருபவன் என்ற ரீதியிலும் எனது மிகுந்த கவலையை தெரிவிக்கின்றேன் என்பதை இவ் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு உண்மையிலே வட மாகாணம் பொதுவாக யாழ்ப்பாணம் என்றால் அம்மக்கள் சைவர்கள் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கின்றது. அத்தோடு சைவ மக்களின் பாரம்பரியம் பேணி வளர்க்கப்பட்ட இடம் யாழ்ப்பாணம் என்றால் மிகையாகாது. 

இன்று எம் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற மேலைத்தேய நாடுகளிலும் எமது இந்து ஆலயங்களை தாபித்தும், இந்து சைவ ஆன்மீகத்தையும், பாரம்பரியங்களையும் கட்டிக் காத்தும் வருகின்றார்கள். ஆனால் இவ்வாறான நற்பெயரை பெற்ற இம்மண்ணில் அதாவது பாவச் சுமைகளை தீர்க்கும் கீரிமலை தீர்த்தமும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க நகுலேஸ்வர தலமும் அமைந்த இப்புனித பூமியில் மிருகப் பலியை ஆலயத்தில் மேற்கொள்ள அனுமதித்தமை இம் மண்ணில் புனிதத்துக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை இட்டு உண்மையான இந்து சைவ சமயத்தை சேர்ந்தவன் என்ற ரீதியில் வன்மையாக கண்டிக்கின்றேன். 

அதுமட்டுமின்றி எந்த அமைப்பானாலும் மிருகப் பலியை ஆலயங்களில் மேற்கொள்வது சரி என தீர்மானித்தால் அவர்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வரவும், எமது சமயம் சார்ந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இந்து ஆலயங்களில் அதாவது சடங்கு முறையான (ஆகமம் சாராத) இந்து ஆலயங்களிலும் பிரதம பூசகராக 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றுபவர் என்ற ரீதியில், ஆலயங்களில் உயிர் பலியிடுதல் தற்போது ஒரு மூட நம்பிக்கை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். 

வேத காலத்தில் உயிர் பலி இடுதல் நடைபெற்றுள்ளது. ஆனால் வேத காலத்தில் எந்தவித இந்து ஆலயங்களும் இல்லை. யாகம், ஓமம் மூலமே தேவர்களை வழிபட்டுள்ளனர். அத்தோடு உயிர்பலியிடுதல் அக்காலத்திலும் ஆலயங்களில் நடைபெறவில்லை. அதுவும் இப்பலியிடுமுறை நடைபெற்ற விதமும் வேறானது. 

ஆகவே இவ்வாறான மூட நம்பிக்கையை எம் இந்துக்களிடம் இருந்து களைந்து இவர்களை உண்மையான சைவ உணர்வுமிக்க இந்துக்களாக வாழ வைக்க வேண்டும். இதற்காக பூரண அர்ப்பணிப்புடன் செயற்பட அடியேன் தயாராக உள்ளேன் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றேன். 

பிழையான நடவடிக்கைக்கு உதவியவர்கள் எவராக இருந்தாலும் இறைவன் மூலம் இவர்கள் தங்களின் இச் செயற்பாட்டை உணரச் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றேன். இவ்விடயங்கள் இந்து மக்களின் ஒன்றுமையின் அவசியத்தையும் எமது சமயத்தை பாதுகாக்க எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் காட்டியுள்ளதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என தமது அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |