மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள்,அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உடைத்து பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்யதுள்ளதுடன் பெருமளவு பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கொள்ளைக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள் உட்பட 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரட்னநாயக்க தெரிவித்தார்.
கடந்த வருடம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழங்குடா, மஞ்சந்தொடுவாய், ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தி வங்கிகள் உடைக்கப்பட்டு கொள்ளையுடன் இவர்கள் தொடர்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு,நாவற்குடா மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை,சவளக்கடை,அம்பாறை ஆகிய பகுதிகளில் தபால் நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதிலும் கைதுசெய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரட்னநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் இவர்களால் குருக்கள்மடம் உட்பட சில பகுதிகளில் இலத்திரனியல் விற்பனை நிலையங்களை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க,மட்டு.அம்பாறை சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மெவன் சில்வா ஆகியோரின் ஆலோசனையின் கீழ் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயந்த ரட்னநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் தலைமையில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி லொக்குகே,பொலிஸ் பரிசோதகர் என்.ரி.அபூபக்கர்,பி.ரி.நஸீர்,பொலிஸ் உத்தியோகத்தர்களான இக்பால்(43865), சிறிசேன(44556), ரவிக்குமார்(6241), அத்தநாயக்க(22478), சிறிதேவ(62369),சமிந்த(68764),சமிந்த(53775)ஆகிய பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்களில் ஒருவர் கல்முனை,சின்னத்தம்பி வீதியில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவிலான பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் மற்றைய நபர் கல்முனைக்குடி பகுதியில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையில் கைதுசெய்யப்பட்டவர் மன்னார்,முருங்கன் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் கல்முனையில் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் அதுதொடர்பிலான விசாரணைகளை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments