Home » » யாழ்ப்பாணத்தில் 1.5 கோடி ரூபா மோசடி செய்த தாயும் மகளும் கைது

யாழ்ப்பாணத்தில் 1.5 கோடி ரூபா மோசடி செய்த தாயும் மகளும் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 07 குடும்பங்களை ஏமாற்றி அக் குடும்பங்களிடமிருந்து ஒரு கோடியே 58 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் இருவரை செவ்வாய்க்கிழமை (20) கைதுசெய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இடைத்தரகராகச் செயற்பட்ட குடும்பம் ஒன்றின் 02 உறுப்பினர்களே யாழ். கஸ்தூரியார் வீதி, யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாகவும்  யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பிரதான சந்தேக நபரான எஸ்.எம்.ஜே.சுரைஸ் என்பவரை  தேடி வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். இவர் வட மாகாண சபைத் தேர்தலில் பொன்சேகா தலைமையிலான கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

யாழ். புலோலி புளியங்கியான் இந்து மயானத்திற்கு அருகிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பெண் ணொருவர் இம்மாதம் 07ஆம் திகதி பருத்தித் துறை பொலிஸாரினால் மீட்கப் பட்டிருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் வெளிநாட்டிற்குச் செல்வதற்காக பெருந் தொகையான பணத்தை கொடுத்துள்ளார். தான் கொடுத்த பணத்தினைத் திருப்பி தருமாறும் இல்லையேல், வெளிநாட்டுக்கு அனுப்புமாறும் பணத்தை கொடுத்தவர்களிடம் கேட்டுள்ளார். இந்நிலையில், பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவர்கள் அப்பெண்ணை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பி அந்தப் பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற வேளை அப்பெண்ணை பின் தொடர்ந்தவர்கள் அப் பெண்ணை முச்சக்கர வண்டி யொன்றில் கடத்திச் சென்று வைத்திருந்து, கை கால்களைக் கட்டி மயானத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில், குறித்த பெண்ணும் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேரும் இணைந்து கஸ்தூரியார் வீதியிலுள்ள இடைத்தரகர் குடும்பத்தின் வீட்டை இன்று செவ்வாய்க்கிழமை (20)  முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக தகவலறிந்த யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் அவ்வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த 02 பெண்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன், குறித்த 07 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |