பிரபலமான இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், வெளிப்படையாகப் பேசுபவர். அதை இந்தப் பேட்டியின் மூலம் நீங்களும் அறியலாம்...
நீங்கள், இலங்கைத் தந்தைக்கும், மலேசியத் தாய்க்கும் பிறந்தவர். அந்த பல கலாசாரப் பின்னணியில் வளர்ந்த அனுபவம் எப்படியிருந்தது?
அது, நான் பல்வேறு கலாசாரங்களைப் புரிந்துகொள்ள உதவியது. மிக முக்கியமாக, வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை உணர்த்தியது. நான், பல்வேறு கலாசாரங்களையும், மொழிகளையும் அறிவதில் ஆர்வம் கொண்டவள். அதனால்தான், பல்வேறு இனங்களின் அருமையான கூட்டணியாக உள்ள இந்தியாவில் என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இந்திய படங்களிலும் நடிக்க முடிகிறது.
இலங்கையில் நீங்கள் வேலை எதுவும் பார்த்தீர்களா?
நான் அங்கேயே வேலை பார்க்கவேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். நான் இதழியல் பயின்றவள் என்பதால், சிறிதுகாலம் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். எனது அத்தை பிரெட்ரிக்கா ஜேன்ஸ் இலங்கையில் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். எனவே அவரின் கீழ் நான் எனது பணியை தொடங்கினேன். ஆனால் வேறு விதமாக நினைத்த விதி, என்னை சினிமாவில் கொண்டுவந்து சேர்த்து விட்டது. இதுவும் நல்ல விஷயம்தான். நாம் எதில் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறோமோ அதில் நம் திறமையை காண்பித்து நன்றாக வாழவேண்டும். அது என்னால் முடிகிறது.
மற்றவர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எது?
நேரந்தவறாமை. நேரத்தை மதிக்காத மனிதர்களை நான் வெறுக்கிறேன். எப்போதும் நேரந்தவறாமல் இருப்பது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. ஆனால் சினிமாத் துறை நேரந்தவறாமைக்கு பெயர் பெற்றது அல்ல. எனவே என்னை எல்லோரும் இங்கே ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆச்சரியமாக பார்த்தாலும் என்னை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எப்போதும் நேரந்தவறாமையை கடைபிடிப்பேன்.
நீங்கள் கைவிட விரும்பும் பழக்கம் எது?
நான் அதீத சுத்த விரும்பி. எனது தோழிகளின் வீடுகளுக்குப் போகும்போதும் அங்கே பொருட்கள் ஒழுங்கில்லாமல் காமாசோமாவென்று கிடந்தால் எனக்குப் பிடிக்காது. நானே அவற்றை ஒழுங்குபடுத்த ஆரம்பித்துவிடுவேன். அது தேவையில்லாமல் நானாக வரவழைத்துக்கொள்ளும் தலைவலி! அதில் இருந்துதான் விடுபட நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. சரி.. அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன்!
இப்போது பெண்களை விரும்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு அப்படி எந்த பெண் மீதாவது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறதா?
உண்மையை சொன்னால், இதுவரை இல்லை! (சிரிக்கிறார்) ஆனால் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட பலர் எனது நண்பர்கள். நான் அவர்களைப் போன்ற ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கவும் செய்கிறேன். அது நவீனத்துவத்தின் அடையாளம், சுதந்திரம், திறந்த மனோபாவத்துக்கான எடுத்துக்காட்டு! எல்லோரும் இந்த உலகத்தில் உரிமையோடும், மகிழ்ச்சியோடும் வாழவேண்டும்.
திருமணத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
திருமணம் பற்றி எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டு. திருமண விகிதத்தை விட விவாகரத்து விகிதம் அதிகம் உள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். இது, ‘திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்ற வாக்கியம் குறித்தே ஐயம் எழுப்புகிறது. எனது பெற்றோர் 30 ஆண்டு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கடந்திருந்திருக்கிறார்கள். அவர்களைப் போல வாழ வேண்டும் என்று எனக்கு ஆசையுண்டு. ஆனால் இன்றைக்கு அது நீளமானதாகத் தெரியும். ஒரு விஷயம் உறுதி, நான் திருமணம் செய்தாலும், செய்துகொள்ளாவிட்டாலும் நிச்சயம் குழந்தைகளை வளர்ப்பேன்!
0 Comments