தலசீமியா நோய் பற்றிய இரத்த பரிசோதனை செய்வதற்கான நவீன உபகரணமொன்று இன்னும் ஓரிரு வாரங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிடைக்கவுள்ள' என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.
உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோய் பற்றிய விழிப்பூட்டல் வைபவமொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (8) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் தலசீமியா எனும் நோய் குடும்ப உறவுகளுக்குள் இடம்பெறும் திருமணங்களின் மூலம் கிடைக்கும் குழந்தைகளுக்கே கூடுதலாக ஏற்படுகின்றது.
இந்த நோய் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பலக்லைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலசீமியா நோய் பற்றிய இரத்த பரிசோதனை செய்வதற்கான நவீன உபகரணமொன்று இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ளது. சுகாதார அமைச்சினால் நாற்பது இலட்சம் பெறுமதியில் இந்த உபகரணம் கிடைக்கவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை பொறுத்த வரைக்கும் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சிதிரா வாமதேவனின் வழிகாட்டலில் சிறுவர் பிரிவு வைத்தியர்கள் இந்த தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு வரும் பிள்ளைகளுக்கு சிறந்த வைத்திய சேவை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அவர்களின் முன்னேற்றத்திற்காவும் எதிர்காலத்திற்காகவும் வழிகாட்டி செயற்படுகின்றனர்' என தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா வாமதேவன் 'தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சில மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகும்' என்றார்.
0 Comments