Home » » தடை செய்யப்பட்டவர்களை சுதந்திரக்கட்சியில் இணைத்து அரசாங்கம் ஆட்சி செய்கிறதுஅரியம் எம்.பி

தடை செய்யப்பட்டவர்களை சுதந்திரக்கட்சியில் இணைத்து அரசாங்கம் ஆட்சி செய்கிறதுஅரியம் எம்.பி

தடை செய்யப்பட்டவர்களை சுதந்திரக்கட்சியில் இணைத்து அரசாங்கம் ஆட்சி செய்கிறது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு அல்ல. பயங்கரவாதம் என்பதற்கு ஜனநாயகம் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தினை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.அபிவிருத்தியை பேசினால், ஜனநாயகம் அபிலாசைகளை கதைத்தால் பயங்கரவாதம் உரிமைகளைப் பற்றி கதைத்தாலும் பயங்கரவாதம். இது தான் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அபிவிருத்தி தேவைகளுக்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் உதவிமூலம் சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டு இருக்கின்றோம்.அதனைக்கூட செய்யாமல் 16 அமைப்புகளை அரசு தடை செய்து இருக்கிறது. ஆகவே, இவ்வாறான விடயங்களை பார்க்கின்றபோது தமிழ் மக்களுக்கு எந்த விடயத்தினையும் செய்யக்கூடாது. அவர்கள் தொடர்ந்து அடிமைகளாக இந்த மண்ணில் இருக்க வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் ஒரே மேடையில் மக்கள் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா. கிருஷ்ணபிள்ளை, இ. பிரசன்னா, கோ. கருணாகரம் (ஜனா), இரா.துரைரெட்ணம், மா நடராசா ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துகளை பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில்
சர்வதேச ரீதியாக தமிழர்களின் பிரச்சினை சென்றிருக்கின்றது. அந்தப் பிரச்சினையினை தீர்க்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு இருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் பேச வேண்டும்.அதனை விடுத்து பல அமைப்புகளை தடைசெய்து இருக்கின்றோம், முடிந்தால் செய்யுங்கள் என்று கூறிக் கொண்டிருப்பது வேடிக்கையானது
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற் தடவையாக ஒரே மேடையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் சந்திப்பு நடத்தப்படுகின்றது. ஏன் நடாத்தப்படுகின்றது என்றால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்குச் சென்று குறைகளை கேட்டறிந்து வருவதுடன் தமிழ் மக்களுக்காகவே குரல் கொடுத்து வருகின்றோம். மட்டக்களப்பில் நீங்கள் வாக்களித்ததன் நிமிர்த்தமாக ஆறுமாகாண சபை உறுப்பினர்களும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடா வருடம் 50 இலட்சம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்கின்றோம். இது போன்று மாகாண சபை உறுப்பினர்களும் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அபிவிருத்திகளை ஓரளவிற்கு செய்து வருகின்றனர். அது தமிழ்க் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கும் நிதியாகும். இதனைத் தவிர புலம்பெயர் அமைப்புகளின் உதவியும் ஓரளவிற்கு கிடைத்து வந்த நிலையில் அதுவும் இன்று தடை செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டத்தினையும் முப்பது வருடம் அஹிம்சைப் போராட்டத்தினையும் மேற்கொண்ட இனமாக இருக்கிறோம்.அரசாங்கம் சமாதானமாக வாழ்கின்றோம் என்று கூறுகின்றது.ஆனால், சமாதானமாக வாழவில்லை. சமாதானமாக, நீதியாக ஒரு தீர்வு வரும் வரைக்கும் நாங்கள் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கு போராடிக்கொண்டே இருக்கிறோம். வட, கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதனால் சர்வதேச நாடுகள் இந்த மக்களுக்கு பல்வேறு நிதிகளை பகிர்ந்தளித்து இருக்கிறது. குறிப்பாக வீதிகள், குளங்கள், பாலங்கள் அமைக்க என யப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மூலம் வழங்கப்படுகிறது. இதனை அரசாங்கம் முன்னெடுத்து செய்துவிட்டு அரசாங்கம் மக்களுக்காக அபிவிருத்திகளை செய்து கொண்டு இருக்கின்றது என சிலர் பிரசாரம் செய்ய முனைகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நீங்கள் ஆதரித்ததன் நிமித்தம் எமது விடுதலைப் பயணம் சர்வதேசத்தை சென்றடைந்துள்ளது. இந்தப் பிரச்சினையை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை அரசாங்கம் இன்று 16 அமைப்புகளையும் 424 நபர்களின் பெயர்களையும் தடை செய்து வெளியிட்டு இருக்கிறது. இதில் வெட்கக்கேடான விடயம் என்னவெனில் தடை செய்யப்பட்ட பெயர்களில் சிலர் இறந்திருப்பதுடன் இன்னும் சிலர் அரசாங்கத்தின் கட்சியில் உள்ள அமைப்பாளர்களின் பெயர்களும் உள்ளடங்குகின்றன. இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இருக்கின்றனர். அவ்வாறானால் சுதந்திரக்கட்சியும் தடை செய்யப்பட வேண்டும் என்பது எங்களது கருத்தாக உள்ளது.
தமிழ் மக்கள் இன்று பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். சிங்கள மக்களாலும் முஸ்லிம்களாலும் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விட்டுக்கொடுப்புகளை கொடுத்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார் என அரசாங்கத்திற்கு  கூறி சலுகைகளைப் பெறுகின்றனர். ஆனால், அரசுடன் இருக்கின்ற எந்த ஒரு முஸ்லிம் கட்சியும் தமிழ்க் கூட்டமைப்புடன் இணையமாட்டார்கள். எமது தலைமையும் நாமும் வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கும்போது இங்கு வாழும் முஸ்லிம்களுடைய பிரச்சினையும் கருத்திற் கொள்ளப்படுவதுடன் முஸ்லிம் களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்காது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |