மாயமான மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி மர்ம தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8ம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
இந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் 26 உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகளின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வரும் மலேசிய அதிகாரிகளின் கவனம், மீண்டும் விமானி சகாரி அகமது ஷா மீது திரும்பியது.
அவரது வீட்டில் கிடைத்துள்ள சில ஆதாரங்கள், அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன.
விமானியின் வீட்டை முதலில் ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலே பறப்பது தொடர்பான பயிற்சிக்கு உரிய கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கருவியை ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகி இருந்த சில தகவல்கள் கடந்த பிப்ரவரி 3ம் திகதி அழிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே விமானம் மாயமான சம்பவத்தில் விமானிக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் விமானம் கடந்த 7ம் திகதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி மர்ம தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விசாரணை அதிகாரிகள் யார் கடைசியாக விமானியுடன் பேசினார்கள் என்பதை கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர் என்று செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது மாயமான விமானம் குறித்தான தகவல்களை பெற முக்கிய துப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மலேசிய அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி அழைப்பை உறுதியும் செய்யவில்லை.
0 Comments