கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறவிடாது தடுத்து சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்துக்குள் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவது எனவும் விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேறுமாறும் பணிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் மீது சுமத்துவதை நிறுத்துமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சில மாணவர்கள் தவறுசெய்ததற்காக ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கையினையும் பாதிக்கச்செய்யும் நடவடிக்கையினை நிர்வாகம் செய்யக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
இதன்போது பல்கலைக்கழகத்தின் வாயிலை அடைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை வெளியேராவண்ணம் ஆர்ப்பாட்டத்தினை நடத்திவருகின்றனர்.
உபவேந்தர் தனது வாகனத்தில் வெளியேறிசெல்ல முற்பட்டபோதிலும் அவர் மாணவர்களினால் தடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் உபவேந்தருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தி எழுதும் வரையில் மாணவர்களின் போராட்டம் நடந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments