ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை எடுத்தது.
அஸ்கர் 90 ஓட்டங்களையும், சமியுல்லா 81 ஓட்டங்களையும் விளாசினர். அரபாத் சன்னி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி 47.5 ஓவர்களில் 222 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. மொமினுல் ஹக் 50 ஓட்டங்களையும், ஜியாவூர் ரகுமான் 41 ஓட்டங்களையும் எடுத்தனர். முகமது 3 விக்கெட்டும், ஷபூர், ஹமீத் ஹசன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
இந்த வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் தலைவர் முகமது கூறியதாவது,
இந்த வெற்றி எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஐ.சி.சி.யின் குழு உறுப்பினராக உள்ள அணிகளில் ஒன்றை முதல்முறையாக வீழ்த்தி இருக்கிறோம்.
இரசிகர்களும், நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.
எங்கள் இரசிகர்கள் எப்போதுமே எங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். எங்களை நேசிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
25 ஓவர் வரை பங்களாதேஷ் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அப்போது அஸ்கர்– சமியுல்லா ஜோடி சிறப்பாக விளையாடியது. கடைசி 10 ஓவரில் 107 ஓட்டங்களைக் குவித்தது முக்கியமானதாகும்.
இதேபோல பந்து வீச்சு களத்தடுப்பு நன்றாக இருந்தது. வீரர்கள் கூட்டு முயற்சியால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து பங்களாதேஷ் தலைவர் முஷ்பிகுர் ரகீம் கூறியதாவது,
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது மிகவும் அவமானமாகும். துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு ஆகிய 3 முறைகளிலும் நாங்கள் செயல் இழந்து விட்டோம்.
எங்களது பந்து வீச்சு முதல் 30 ஓவர்கள் வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.
254 ஓட்டங்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி வரை வெற்றிக்காக போராடினோம். சீனியர் வீரர்களான சகீப்–அல்– ஹசன், தமிம் இக்பால் இல்லாதது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இனிவரும் ஆட்டங்களில் முன்னேற்றம் அடைய விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


0 Comments